Homeஆன்மீகம்சிவராத்திரியில் பங்கேற்ற சிவனால் சபிக்கப்பட்ட தாழம்பூ

சிவராத்திரியில் பங்கேற்ற சிவனால் சபிக்கப்பட்ட தாழம்பூ

சிவராத்திரியில் பங்கேற்ற சிவனால் சபிக்கப்பட்ட தாழம்பூ

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் லிங்ககோத்பவர் மீது சிவனால் சபிக்கப்பட்ட தாழம்பூ வைத்து பூஜை செய்யப்பட்டது.

சிறந்த தலம்

சமய உலகில் புகழ்பெற்ற திருத்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். மூர்த்தி¸ தலம்¸ தீர்த்தம் என மூன்றாலும் சிறந்த இத்தலம்¸ ஆறு ஆதாரத் தலங்களில் மணிப் பூரகமாகவும்¸ பஞ்சபூதத் தலங்களில் தேயுத்தலமாகவும் விளங்குகின்றது.

லிங்கோத்பவ மூர்த்தி

படைப்புக் கடவுளாகிய பிரம்மனும்¸ காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும்¸ தன்னில் யார் பெரியவர் என பல வாதங்கள் புரிந்து இறுதியில் சண்டையிட்டனர். அவர்களுடைய ஆங்காரத்தை போக்கிட அவர்களால் அளவிடமுடியாத சிவலிங்கத் திருவுருவில் அடிமுடி காண இயலாத ஜோதி பிழம்பாக¸ லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் காட்சியளித்தார். அந்நாள்தான் சிவராத்திரியாகும்.

சிவபெருமானுக்குரிய திருவடிவங்களில் முதலாவதாக அமைவது லிங்கோத்பவமூர்த்தி அது அருவுருவாகும். இறைவன் அருவாகவே நின்றால் உலகுயிர்களுக்குப் பெருநன்மை விளைவிக்க முடியாது என்று திருவுள்ளம் கொண்டு¸ அவர்களின் கண்காணத் தோன்ற நினைத்தபோது முதலில் அருவுருவாகவும் பின்பு உருவாகவும் தோற்றியருளினார்.

திருஞான சம்பந்தர்

அருவுக்கும் உருவுக்கும் இடைநின்றதே அருவுருவும் ஆதலின்¸ அதுவே முதல் மூர்த்தி ஆயிற்று. திருமாலும்¸ அயனும் தேட¸ அடிமுடி காண இயலாத நிலையை சோதிப்பிழம்பாக நின்ற நிலைதான் லிங்கோத்பவர் உருவமாகும். திருஞான சம்பந்தப்பெருமான் தாம்பாடிய ஒவ்வொரு திருப்பதிகத்திலும் ஒன்பதாவது பாசுரத்தில் லிங்கோத்பவ மூர்த்தியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஆணவம் ஒழியும்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறம் சுவற்றில் லிங்கோத்பவர் அமைய பெற்று பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இவரை வழிபடுவர்களின் ஆணவத்தை அவர் அகற்றி விடுவார் என்பது ஐதீகம்.

பொய் சாட்சி 

தன்னுடைய அடிமுடியை பிரம்மா கண்டதாக பொய் சாட்சி கூறிய தாழம்பூவை இறைவன் இனி எந்த பூஜைக்கும் நீ ஏற்றதல்ல என சபித்தார். பிரம்மாவையும் சபித்து விட்டார். பிரம்மா தான் செய்த தவறை உணர்ந்து¸ தன் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும் என இறைவனிடம் வேண்ட¸ அவரும்¸ அடி அண்ணாமலையில் லிங்க ரூபத்தை ஸ்தாபித்து¸ வழிபட்டு¸ அண்ணாமலையை கிரிவல வர¸ உமது சாபம் நீங்கும் என அருள் மகா அவ்வாறே செய்து பின்னாளில் பிரம்மா சாபம் நீங்கப் பெற்றார்.

விஷ்ணுவும்¸ தமது அகந்தையால் நடந்தவற்றுக்கு வருந்த¸ அவரும் அருணகிரி எனும் லிங்கத்தை ஸ்தாபித்து ஐயங்குளக் கரையில் வழிபட்டு வரலானார். தாழம்பூவும் மனம் வருந்தவே சிவராத்திரி அன்று மட்டும் பூஜையில் பங்கேற்கும் வரம் அதற்கு கிடைத்ததாக வரலாறு.

சிவராத்திரியில் பங்கேற்ற சிவனால் சபிக்கப்பட்ட தாழம்பூசிறப்பு அபிஷேகம் 

அண்ணாமலையார் கோயிலில் நேற்று சிவராத்திரியை  முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும்¸  ஆராதனைகளும் நடைபெற்றது.

லிங்கோத்பவருக்கு மஞ்சள்¸ பால்¸ சந்தனம்¸ தயிர்¸ பஞ்சாமிரதம்¸ ருத்ராட்சம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு சிவராத்திரி அன்று மட்டுமே பயன்படுத்தப்படும் தாழம்பூ லிங்கோத்பவர் மீது வைக்கப்பட்டு  தீபாரதனை நடைபெற்றது.

இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். மூலவரான அண்ணாமலையாருக்கு நேற்றிரவு ஆரம்பித்து 4 கால பூஜை விடிய¸விடிய நடைபெற்றது. இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருந்து பக்தர்கள் அண்ணாமலையாரை வழிபட்டனர்.

நம்மிடம் இறைவன் 

இது குறித்து கோயில் சிவாச்சாரியார் டி.கே.டி. அருணாச்சல கார்த்தி கூறுகையில் நம்மை நாமே கட்டுப்படுத்துவது என்பதுதான் கண் விழித்தல் ஆகும். கண் விழித்து விரதம் இருக்கையில் சிவ மந்திரங்களை ஓதுவதால் வாயும்¸ சிவபெருமானை நினைத்து தூங்காமல் இருப்பதால் கண்ணும்¸ நல்லவற்றை கேட்பதால் காதும் கட்டுப்படுகிறது. இது தான் விரத காலத்தின் முக்கியத்துவம் ஆகும். இதன் மூலம் இறைவன் நம்மிடம் இருக்கிறான் என்பது அர்த்தம் என்றார்.

சிறப்புடன் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் லட்ச தீபம் ஏற்ற முடியவில்லையே என பக்தர்கள் மனம் வருந்தி சென்றதை பார்க்க முடிந்தது.

பேட்டி¸படங்கள்- S.அருணாசலம் 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!