கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என திருவண்ணாமலை நகராட்சி அறிவித்துள்ளது.
மக்கள் அலட்சியம்
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் 1980 கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை¸ தஞ்சாவூர் உள்ளிட்ட பெருநகரங்களிலும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 600ஐ தாண்டி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் எந்த வித சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் கூடுவதும்¸ அலட்சியமாக இருந்து கிருமி நாசினி¸ சோப்புகளை கொண்டு கை கழுவ மறந்ததும்¸ முககவசம் அணியாததும் கொரோனா அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.
கொரோனா 2வது அலை ஏற்பட்டு தேர்தல் முடிந்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமோ? என்ற கவலை பொதுமக்களுக்கு எழுந்திருக்கிறது. சுகாதாரத்துறை பல ஊர்களில் கொரோனா பரவல் தடுத்திட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் திருவண்ணாமலையில் இதற்காக எந்தவித நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை எடுக்கவில்லை. கொசு மருந்து¸ கிருமி நாசினி அடிக்கும் பணிகள் எங்கும் நடைபெறவில்லை.
வியாபாரிகள் வாக்குவாதம்
இந்நிலையில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கடைகளில் திடீரென சோதனை நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால் அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்காமல் எப்படி அபராதம் விதிக்கலாம் என அவர்கள் நகராட்சி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி |
இதையடுத்து திருவண்ணாமலை நகராட்சி நேற்று மாலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது¸
அனைத்து வணிகப் பெருமக்களுக்கும் நகராட்சியின் ஓர் முக்கிய அறிவிப்பு
சமுதாய இடைவெளி
தமிழகத்தின் அநேக பகுதிகளில் மீண்டும் கொரோனா காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன மேலும் ஏற்கனவே இது குறித்த தமிழக அரசின் தடைகளும் அமலில் உள்ளன எனவே தங்கள் நிறுவனங்களில் ஏற்கனவே தெரிவித்தது போல் சமுதாய இடைவெளி ¸ உடல் வெப்பமானி பரிசோதனை¸ கிருமி நாசினி தெளித்தல்¸ மற்றும் கண்டிப்பாக தங்கள் பணியாளர்கள் முககவசம் அணிவதுடன் முகக்கவசம் அணிந்துவர்களை மட்டுமே நிறுவனத்திற்குள் அனுமதித்தல் போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
நகராட்சியில் குழுக்கள்
எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அதனை கடை பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கவும் நகராட்சியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவே தேவையற்ற மனக் கசப்பை தவிர்த்திட அரசின் வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளது. ஊரடங்கை தவிர்க்க பொதுமக்கள் தகுந்த வழிமுறைகளை கடைப்பிடித்து கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.