Homeஆன்மீகம்வியக்க வைக்கும் கோட்டை ராஜ காளியம்மன் கோயில்

வியக்க வைக்கும் கோட்டை ராஜ காளியம்மன் கோயில்

வியக்க வைக்கும் கோட்டை ராஜகாளியம்மன் கோயில் 

பிரச்சனைகளை தீரவும்¸ வேண்டுதல் நிறைவேறவும் பலவித பழங்களை கொண்டு அகரம் ராஜகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் யாகம் நடத்தி வருகின்றனர். 

சிம்ம வாகனத்தில்

சந்தன மாநகரமான திருப்பத்தூர் நகரத்தின் அருகில் அமைதியும் சொர்க்கமாக ஜவ்வாதுமலை தொடர்ச்சியின் கீழ் தென்றல் தாலாட்டும் தென்னமர தோப்புகள் நிறைந்த இயற்கை எழில்சூழ்ந்த அகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அம்பாள் ராஜகாளியம்மன் என்ற பெயரில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபினியாக சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

அம்மனுக்கு முன் முகப்பு வாயிலில் அருள்பொழியும் பிரமாண்டமான 60 அடி ஸ்ரீராஜகாளியம்மன் திருவுருவ சிலை உள்ளது. இந்த அம்மனை மனதார வேண்டி வணங்கினால் கர்ம வினைகளை தொலையும் என்பதும் அம்மனுக்கு பிரார்த்தனைகள் நிறைவேறியதும் நித்ய யாக குண்டத்தை (அணையாத) 18 முறை சுற்றி வலம் வந்து காளிக்கு 1008 மாதுளம்பழங்களை யாகத்தில் செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும் கல்வி¸ செல்வம்¸ ஞானம் பெறவும் திருமண தடை, கடன் பிரச்சனை, வியாபார விருத்தி, குழந்தை பாக்கியம் பெறவும் அமாவாசையில் அம்மனை வழிபடுகின்றனர்.

மூலவர் கிழக்கு பார்த்தவாறும், ராஜகம்பீரத்துடன் 60 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ராஜகாளியம்மனும் ஒருசேர உள்ளதால் தட்சினதிக் பாகம் என்று அழைக்கப்படுவது இத்தல சிறப்பாக கருதப்படுகிறது. தீர்த்தமாக கையிலாய தீர்த்தமும் தலவிருட்சமாக நாகலிங்க மரமும் அம்மன் பாதத்தின்கீழ் உள்ளது மென்மேலும் சிறப்பாக கருதப்படுகிறது.

பழங்களால் யாகம்

எதிரிகள் தொல்லை நீங்க மூலவர் தசமகா வித்திய தேவிகளாக ஸ்ரீகாளிதேவிக்கு 1008 மாதுளம்பழங்களை கொண்டு ஹோமமும் நடத்தப்படுகிறது. கல்வி அறிவு ஞானம் பெற ஸ்ரீதாராதேவிக்கு 1008 பலாப்பழங்களை கொண்டும்,பயிர்கள் செழிக்க உயிரினங்கள் வளமுடன் வாழ ஸ்ரீமகா திரிபுர சுந்தரிக்கு 1008 மாம்பழங்களை கொண்டு ஹோமமும், குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க வேண்டி ஸ்ரீமகா புவனேஸ்வரிக்கு 640 வெண்பூசணி கனிகளை கொண்டு ஹோமமும்,சகல விதமான கிரக தோஷங்கள் நீங்க ஸ்ரீமகா திரிபுர பைரவிக்கு 3254 கொய்யாப்பழங்களை கொண்டு ஹோமமும், குழந்தை பாக்கியம் வேண்டி 5018 செர்ரிப்பழங்களை கொண்டு ஸ்ரீமகாசின்னமஸ்தாவுக்கு ஹோமமும், தீராத நோய்களிலிருந்து விடுபட 508 அன்னாச்சி பழங்களை கொண்டு ஸ்ரீ மகா தூமாவதி தேவிக்கு ஹோமமும், தொழில் வளர்ச்சி பெற 1001 காட்டு கொழிஞ்சி பழங்களை கொண்டு ஸ்ரீமகா பகளாமுகிக்கு ஹோமமும், பதவி உயர்வு வேண்டி 9018 வாழைப்பழங்களை கொண்டு ஸ்ரீமகாராஜ மாதாகிக்கு ஹோமும்¸ சகல சௌபாக்கியம் பெற 1008 வில்வ பழங்களை கொண்டு ஸ்ரீமகா கமலாத்மிகா தேவிக்கு ஹோமமும் நடத்தப்படுகிறது. 

See also  ராஜகோபுரம் மூடப்பட்டது-இருளில் பக்தர்கள் தவிப்பு

மேலும் செல்வம்பாளை வேண்டி 8000 நெல்லி கனிகளை கொண்டு லஷ்மி குபேரனுக்கு ஹோமமும், ஆயுள் விருத்தியடைய 1184 லட்டுகளை கொண்டு இத்தலத்திலுள்ள ஆஞ்சநேயருக்கு ஹோமமும் நடத்தப்படுகிறது.

நட்சத்திர வனம்

ராஜகாளீஸ்வரர் சன்னதியில் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் உரிய மரங்களும், அதற்குரிய சக்கரங்களும், 12 ராசிக்காரர்களுக்கு உரிய மரங்களும், அதற்குரிய சக்கரங்களும், 9 நவக்கிரக மரங்களும், அதற்குரிய சக்கரங்களும் உள்ளன. 1008 மூலிகைகளைக் கொண்ட வனம் அமைக்கப்பட்டு வருகிறது. பிரம்மீடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த தியானபீடத்தின் உள்ளே நான்கரை அடி உயரத்தில் பச்சிலை மூலிகைகளால் உருவாக்கப்பட்ட ராஜகாளியம்மன் சிலை உள்ளது. 10 ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து சேகரித்த மூலிகைகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்வாகி சுந்தரேச சுவாமிகள் தெரிவித்தார்.

வியக்க வைக்கும் கோட்டை ராஜகாளியம்மன் கோயில்

கோவிலின் அமைப்பு

இக்கோவிலின் முகப்பு வாயிலில் வீற்றிருந்து அருள்பொழியும் பிரமாண்டமான 60 அடி உயர ஸ்ரீராஜகாளியம்மன் திருவுருவச் சிலையே சிறப்பம்சமாக விளங்குகிறது. ஆதிசக்தியாய் விளங்கும் ஸ்ரீராஜகாளியம்மன் சிலையில் பத்துக் கரங்களிலும் முறையே கத்தி¸ அம்பு¸ சுதை¸ சலம்¸ சக்கரம்¸ சங்கு¸ பாசக்கயிறு¸ பரிசமென்னும் குண்டாந்தடி உடுக்கை¸ குங்குமச்சிமிழ் ஆகிய பத்தும் காணப்படுகிறது. இவற்றுள் முக்கியமாக ஸ்ரீராஜகாளியம்மன் சிலையில் ஸ்ரீவிஷ்ணுவின் ஆயுதமான சங்கு சிவச்சக்கரமும் சிவபெருமானின் ஆயுதமான உடுக்கை மற்றும் பாசக்கயிறும் பார்வதி அம்மனின் ஆயுதமான கத்தி மற்றும் சுதையும் ஒருங்கே அமையப்பெற்று இருப்பது அம்மனின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்துகிறது. 

See also  தீ மிதித்தால் குழந்தை பாக்கியம் தரும் திரௌபதியம்மன்

ஆஞ்சநேயர் சன்னதி

சர்வசக்தி கொண்ட ராஜகாளியம்மன் சிலைக்கு அருகில் தலவிருட்சமாக நாகலிங்க மரமும் ராஜகாளியம்மன் அடிபாதத்தில் வலதுபுறமாக சுடலை காரியம்மனும் இடதுபுறத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனும் காட்சியளிக்கின்றனர். அம்மன் சிலைக்கு மேற்குநோக்கி சாந்தசொரூப ராஜகாளியம்மன் சன்னதியில்  ராஜகாளியம்மன் சாந்தம் உள்ள மூலவராக காட்சியளிக்கிறார். கருவறையின் இடதுபுறத்தில் பாலவிநாயகரும் வலதுபுறத்தில் பாலமுருகனும் அம்மன் சன்னதிக்கு கருவறைக்கு வலப்புற திசையில் நாககாளியம்மன் சன்னதி உள்ளது. நாககாளியம்மனுக்கு வலதுபுறத்தில் காரமுள்ளாலான அருள்வாக்கு மடை அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் மேற்கு திசையில் ஆஞ்சநேயர் சன்னதியும் வடதிசையில் யாகசாலை மண்டபமும் அமைந்துள்ளன. 

வியக்க வைக்கும் கோட்டை ராஜகாளியம்மன் கோயில்

யாகசாலை மண்டபத்தின் அருகே உற்சவ மூர்த்தியாக காளியம்மனும் கடைகோடியில் நவக்கிரக சன்னதிக்கு அருகில் சப்த கன்னிகளும் ஒருங்கே அமைக்கப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாக உள்ளது. இதனருகே காளிதேவி,தாராதேவி,திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி, தரிபுர பைரவி, சின்னமஸ்தா, துமாவதி,பகளாமூகி, ராஜமாதாங்கி,கமலாத்மிகை ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். சற்குணங்களும் அடங்கிய இத்திருக்கோயிலில் பக்தர்கள் வருடத்திற்கு ஒருமுறை விழா கொண்டாடி வந்துள்ளனர். மேலும் மாதந்தோறும் அமாவாசை பவுர்ணமிகளில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இத்திருக்கோவில் பழமையான கோவில் என்றாலும் பூஜைகள் சிறப்பாக நடைபெறாமல் இருந்தபோதும் 1984ம் ஆண்டு முதல் தவத்திரு சுந்தரேச சுவாமிகள் அருள்முயற்சியால் பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

சுந்தரேச சுவாமிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அகரம் கிராமத்தில் ராஜு உண்ணாமலை தம்பதிகளுக்கு முதல் மகனாக 1961ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி தவத்திரு சுந்தரேச சுவாமிகள் பிறந்தார். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு பக்தர்களுக்கு அம்மனின் அருளை பெற்று அருள்வாக்கு வழங்கும் அம்மன் அடிமையாகவும் மனித உருவில் வாழ்ந்து வருகிறார்.

ஸ்ரீராஜகாளி அம்மனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சுந்தரேச சுவாமிகள் 1984ம் ஆண்டு வைகாசி மாதம் 23ந் தேதி இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் பேரொளி பிழம்பாக ஸ்ரீராஜகாளியம்மன் தோன்றி இவ்விடத்தில் 60 அடி உயரத்துடன் தன்னை சிலை வடிவில் வடிவமைக்குமாறு கட்டளையிட்டார். அன்றே அக்கனமே அம்மனின் அருள் சுரந்தது அவரைக் கருவியாகக் கொண்டு ஸ்ரீராஜகாளியம்மன் தன் ஆலயபணியை தொடங்கிவிட்டாள். பல இடைறுகளுக்கு மத்தியில் அம்மனின் கட்டளைக்கிணங்க சுந்தரேச சுவாமிகள் தனக்கு தானே உறுதிமொழியேற்று தனது உறுதிமொழியின்படி 22 ஆண்டுகளுக்கு மேலாக தனது அயராத உழைப்பினால் 60 அடி உயர ராஜகாளியம்மனை நிறுவினார். 

See also  ஒவ்வொரு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

அருள்வாக்கு 

கடந்த 3.6.2006 அன்று கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நிறைவு செய்தார். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்துவரும் பக்தர்களின் குறைகளை கேட்டு அருள்வாக்கு வழங்கி நிவர்த்தி செய்து வருகிறார். தமிழகத்தில் மாமன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் கட்டப்பட்ட கோயில்களின் மத்தியில் சாதாரண நபர் கட்டியுள்ள இக்கோயில் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

அன்னதானம்

தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நடைபெறும் அன்னதானத்துக்கு பொது மக்கள்  தங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பிறந்தநாள், திருமண நாள், புத்தாண்டு, தீபாவளி,பொங்கல், பவுர்ணமி நாட்கள் போன்ற  முக்கிய தினங்களிலும், தங்களின் முன்னோர்களின் நினைவாகவும் அன்னதானம் செய்யுமாறு பக்தர்களை கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இத்தலத்தின் பாடல்

‘உலக சக்தியாய் நிற்கும் மஞ்சள் குங்குமம் நிறைந்த மதிமுகம் கொண்ட ராஜகாளியம்மன் மலரடியில் வீழ்ந்திடும் நித்திய சுகம் தரப் பணிந்தால் இன்பமெல்லாம் அருளி நலம் தருவாள் நம் அன்னை”

தொடர்புக்கு

ஸ்ரீராஜகாளியம்மன் சித்தர் பீடம்¸அகரம் கிராமம்¸ திருப்பத்தூர் மாவட்டம்.

9345020079¸ 9842610765¸ 6374335360

அமைவிடம்

திருப்பத்தூரிலிருந்து சிங்கார பேட்டை செல்லும் அனைத்து பேருந்துகளும் வெங்கலாபுரம் நின்று செல்லும். அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து  திருப்பத்தூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் வெங்கலாபுரம் நின்று செல்லும். அங்கிருந்து பஸ்¸ ஷேர் ஆட்டோ வசதியுள்ளது.

– ப.பரசுராமன் 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!