திருவண்ணாமலையில் பா.ஜ.கவிற்கு எதிராக அதிமுக வேட்பு மனு தாக்கல் செய்ததால் 2 கட்சியினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வேட்பு மனு பரிசீலனையில் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்பு மனு பரிசீலனை
தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற 6ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் களம் சூடு பறக்கத் தொடங்கியுள்ளது. நேற்றோடு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டது.
போட்டி வேட்பு மனு
திருவண்ணாமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்று காலை 11மணிக்கு வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. வழக்குகளை காரணம் காட்டி திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் தணிகைவேலின் வேட்பு மனு தள்ளுபடி ஆகி விடும் என 2 நாட்களாக பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றாற்போல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பழகன் திடீரென இறுதி நாளான நேற்று வேட்பு மனு வாங்கும் நேரம் முடிவடைவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு தனது மனுவை தாக்கல் செய்தார்.
திமுகவினர் அமைதி
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தணிகைவேலின் மனு தள்ளுபடி ஆகாது என பா.ஜ.க தரப்பினர் நம்பிக்கையுடன் கூறிவந்தனர். அவரது மனுவை பரிசீலனைக்கு வந்த போது எதிர்பாராதவிதமாக எந்தவித ஆட்சேபனையும் செய்யாமல் திமுக வழக்கறிஞர்கள் அமைதி காத்தனர். பரிசீலனை முடிந்ததும் தணிகைவேலின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றிவேல் அறிவித்தார். இதனால் பா.ஜ.கவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பா.ஜ.க ஆட்சேபனை
கடைசியாக தணிகைவேலுவிற்கு போட்டி வேட்பாளராக களமிறங்கிய வழக்கறிஞர் அன்பழகனின் மனு பரிசீலனை செய்யப்பட்டது. அவரது மனுவை ஏற்கக் கூடாது என பா.ஜ.க வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அன்பழகன் தனது வேட்பு மனுவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் கட்சியின் அங்கீகார கடிதத்தை மனுவுடன் அவர் இணைக்கவில்லை. இதை குறிப்பிட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்பட்டது.
கடும் வாக்குவாதம்
அப்போது அ.தி.மு.க-பா.ஜ.கவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போளுரில் நாங்கள் இல்லாமல் வெற்றி பெற்று விடுவீர்களா? உள்குத்து வேலை செய்யணுமா? என பா.ஜ.கவினர் கேட்டனர். அதற்கு திருவண்ணாமலையில் ஓட்டு வாங்கி விடுவீர்களா? என அதிமுகவினர் கேட்டனர். இதனால் மனு பரிசீலனை செய்யும் இடத்தில் ஒரே கூச்சலாக இருந்தது. அவர்களை அதிகாரிகள் அமைதிபடுத்தினர்.
மனு தள்ளுபடி
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 19ந் தேதி பகல் 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் பார்ம் ஏ¸ பார்ம் பி (கட்சியின் வேட்பாளர் என்ற அங்கீகார கடிதம் மற்றும் கட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரிய கடிதம்) ஆகியவற்றை தர வேண்டும். ஆனால் அன்பழகன் அந்த பார்ம்களை இன்று காலை தந்ததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி வெற்றிவேல் அறிவித்தார். அப்போது பா.ஜ.கவினர் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொண்டர்கள் குழப்பம்
அன்பழகன் குறிப்பிட்ட நேரத்தில் கட்சி கொடுத்த கடிதங்களை தேர்தல் அலுவலரிடம் கொடுத்திருந்தால் அவர் இன்று அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்திருப்பார். அதிமுகவிற்கும்¸ பாஜகவிற்கும் திடீரென ஏற்பட்ட உரசலுக்கு என்ன காரணம் என்பது தெரியாமல் தொண்டர்கள் குழம்பி உள்ளனர். இதனால் அதிமுகவினரின் ஓட்டு முழுமையாக பா.ஜ.விற்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திமுகவினர் வேடிக்கை
அதிமுக-பாஜகவினரின் சண்டையை திமுகவினர் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். எப்போதுமே வேட்பு மனு பரிசீலனையின் போது எதிர்கட்சிகளிடையேதான் மோதல் ஏற்படும். ஆனால் திருவண்ணாமலையில் கூட்டணி கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.