ஸ்டாலின் வந்திருக்கும் நேரம் பார்த்து பணம் இருப்பதை காட்டிக் கொடுத்த கருப்பு ஆடு யார்? என எ.வ.வேலு தரப்பு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
செலவு செய்து
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு 3வது முறையாக போட்டியிடுகிறார். சென்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நின்ற பெருமாள்நகர் ராஜனை தோற்கடித்தார். அப்போது இரட்டை இலக்கில் கோடிக்கணக்கான ரூபாயை அவர் செலவு செய்து வெற்றி பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
நடைபெற உள்ள தேர்தலில் அவர் முதன்முறையாக பா.ஜ.கவை எதிர்த்து நிற்கிறார். பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தணிகைவேலும்¸ எ.வ.வேலும் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.
அதிரடி சோதனை
இதற்காக நேற்று இரவே அவர் திருவண்ணாமலை வேட்பாளர் தென்மாத்தூரில் உள்ள எ.வ.வேலுவின் கம்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள கெஸ்ட் அவுசில் வந்து தங்கினார். காலையில் பிரச்சாரத்திற்காக புறப்பட்டு சென்றார். இதற்காக காத்திருந்த வருமானவரித்துறையினர் கல்லூரியில் நுழைந்து அதிரடி சோதனையை நடத்தினர். 500 ஏக்கருக்கும் மேல் அமைந்திருக்கும் கல்லூரி வளாகத்தில் பொறியியல் கல்லூரி¸ மகளிர் கல்லூரி¸ மருத்துவக் கல்லூரி¸ பாலிடெக்னிக் கல்லூரி¸ மெட்ரிகுலேஷன் பள்ளி¸ ஆடிட்டோரியம்¸ கெஸ்ட் அவுஸ்¸ பெரிய விளையாட்டு மைதானம்¸ வீடுகள்¸ கோயில்கள் உள்ளன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்
இங்கெல்லாம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. பிரச்சாரம் முடிந்து திரும்பி கல்லூரிக்கு வந்த ஸ்டாலின் மாலை 4-30 வரை ஓய்வெடுத்தார். பிறகு பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது அறையிலும் சோதனை நடைபெற்றதாக தகவல் பரவியது.இறுகிய முகத்துடன் வந்த ஸ்டாலினிடம் வெளியில் நின்றிருந்த செய்தியாளர்கள் ரெய்டு குறித்து கருத்து கேட்க முயன்றனர். ஆனால் ஸ்டாலின் நிற்காமல் சென்று விட்டார். கல்லூரிக்கு முன்பு எம்.எல்.ஏக்கள் கிரி¸ பிச்சாண்டி மற்றும் கட்சியினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கல்லூரி மாணவ-மாணவியர்கள் சோதனைக்கு பிறகே வெளியில் அனுப்பப்பட்டனர்.
உபகரணங்கள் வாங்க
இந்நிலையில் வருமான வரித்துறையினரால் ரூ.3 கோடியே 50 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மருத்துவக்கல்லூரியில் உபகரணங்கள் வாங்க இந்த பணம் வைக்கப்பட்டிருந்ததாக எ.வ.வேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். இதற்கான ஆவணங்கள் இல்லாததால் பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது என்ற விவரத்தை வருமான வரித்துறை தெரிவிக்கவில்லை.
திருவண்ணாமலை¸ கிருஷ்ணகிரி¸ தருமபுரி¸ வேலூர் ஆகிய மாவட்டங்களின் தேர்தல் பொருப்பாளராக எ.வ.வேலு உள்ளார். இந்த தொகுதிகளுக்கும்¸ இன்று ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்திற்கு வந்திருந்த 8 வேட்பாளர்களுக்கும் பட்டுவாடா செய்வற்காக எ.வ.வேலு கல்லூரியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்தே இந்த ரெய்டு நடந்திருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
அரண்மனை ரகசியங்கள்
சில மாதங்களுக்கு முன்பு அவருடன் நெருக்கமாக இருந்த மாவட்ட திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன்¸ எ.வ.வேலுவுக்கு 6 ஆயிரம் ஏக்கர் நிலம்¸ பைனான்சில் ரூ.500 கோடி முதலீடு¸ 8 கல்லூரி உள்ளதாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதன் பிறகு தன்னை சீண்டிய திமுகவினருக்கு எல்லா உண்மைகளையும் சொல்ல ஆரம்பித்தால் என்னவாகும் என்னை விட அரண்மனை ரகசியங்கள் அறிந்தவன் எவன் இருக்கிறான் என பதிலடி கொடுத்திருந்தார். பிறகு அவர் சமாதானப்படுத்தப்பட்டு வேலுவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்.
வாக்கு சேகரிப்பு ரத்து
இதே போல் எ.வ.வேலுவுடன் இருப்பவர் ஒருவர்¸ பா.ஜ.க தரப்போடு நெருக்கமாக இருந்து வருவதும் எ.வ.வேலுவுக்கு தெரிய வந்துள்ளதாம். போட்டு கொடுத்த வேலையை உடன் இருந்தவர்கள் செய்தார்களா? எதிர்கட்சியினர் செய்தார்களா? என்ற குழப்பத்தில் உள்ளாராம் எ.வ.வேலு. வருமானவரித்துறை ரெய்டின் காரணமாக நாளை நடக்க இருந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியை வேலு ரத்து செய்து விட்டார். ரெய்டில் கிடைத்தது என்ன? என்பது குறித்து வருமான வரித்துறை நாளை தெரிவிக்க வாய்ப்புள்ளது.