ஒரு ஆண் கற்பழிக்கப்படுகிறான் என்ற நிலை வரும் போதுதான் ஆண்களுக்கு பாதுகாப்பு சட்டம் தேவை என கல்லூரி மாணவர் கேள்விக்கு பதிலளித்ததாக நீதிபதி கூறினார்.
பயிற்சி பட்டறை
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பெண்குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிற்சி பட்டறை திருவண்ணாமலை ராமகிருஷ்ணா ஓட்டலில் நடைபெற்றது.
சினம் தொண்டு நிறுவன செயலாளர் இராம.பெருமாள் அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் மக்கள் அமைப்பின் திட்ட பயிற்சியாளர் பா.மெல்வின் விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்டசமூக நல அலுவலர் பி.கந்தன் தலைமை தாங்கினார்.
சார்பு நீதிபதி
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சார்பு நீதிபதி கே.ராஜ்மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது¸
அடிப்படை சட்ட அறிவு பெண்களுக்கு அவசிமான ஒன்றாகும். ஆண்களை விட பெண்களால் சாதிக்க முடியும். ஆண்களிடம் 100ரூபாயை கொடுத்தால் செலவு செய்த விடுவார்கள். ஆனால் பெண்கள் சேமித்து வைப்பார்கள். பெண்களால்தான் குடும்பத்தை உருவாக்கி அதை பொருளாதார ரீதியாக உயர்த்திட முடியும். பெண்களின் பாதுகாப்புக்கும்¸தன்னம்பிக்கைக்கும் கல்வி அவசியம்.
ஆண்களுக்கு சட்டம்
பெண்களால் ஆண்களை விட அதிகமாக சாதிக்க முடியும். பெண்கள் அவர்களது உரிமைகளை விட்டு கொடுத்து விட்டார்கள். அது எங்கே போய் முடிந்தது என்றால் பாதுகாப்பு என்னும் இடத்தில் வந்து நிற்கிறது. எங்களால் எங்களை பாதுகாத்திட முடியாது என்கின்றனர். ஒரு கல்லூரியில் பெண்களுக்கான சட்டங்கள்¸பாதுகாப்பு குறித்து நான் பேசும் போது ஒரு மாணவன் எழுந்து பெண்களுக்குத்தான் சட்டங்கள் நிறைய இருக்கிறது¸ ஆண்கள் பாதுகாப்புக்கு ஒரு சட்டம் கூட போடவில்லை சார் என்றான். என்று ஒரு ஆண் கற்பழிக்கப்படுகிறான் என்ற நிலைமை வருகிறதோ அன்றைக்குத்தான் ஆண்களுக்கு பாதுகாப்பு சட்டம் தேவை என பதிலளித்தேன். உண்மைதானே?
முதல் சட்டம்
இந்தியாவில் இருந்த மன்னர்கள் செய்யாத பெரிய சாதனை வெள்ளைக்காரர்களால் செய்யப்பட்டது. ஒரு வெள்ளைக்காரருக்கு பெண்களின் வலி தெரிந்தது. உயிரோடு பெண்¸ இறந்த கணவனோடு சேர்த்து மனைவி உயிரோடு கொளுத்தப்படுகிறாள். அந்த வலி வெள்ளைக்காரருக்கு தெரிந்தது. அப்போது கொண்டு வரப்பட்டதுதான் முதல் பாதுகாப்பு சட்டம். புருஷன் செத்து போன பிறகு பொண்டாட்டி சந்தோஷமாக இருப்பதா? என பல ஆண்கள் நொந்து போனார்கள். ஒவ்வொரு பெண்களின் வலி மீதும் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. உலகம் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது பெண்கள் இனத்தினால்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட நீதிபதி
முன்னதாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஹேமலதா டேனியல்¸ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.செல்வி¸ குழந்தைகள் உதவி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். முருகன்¸ மாவட்ட தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.செல்வநாதன்¸ அரசு வழக்கறிஞர் ஏ.அர்ச்சனா¸ வழக்கறிஞர் கோமளவள்ளி ஆகியோர் பேசினார்கள்.
முடிவில் ட்ரீஸ் நிறுவனர் பி.சேகர் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை சினம்¸ ட்ரீஸ்¸ திருப்பூர் மக்கள் அமைப்பு போன்ற தொண்டு நிறுவனங்கள் செய்திருந்தன.