Homeஆன்மீகம்திருவண்ணாமலை - வியப்பூட்டும் மன்னர் கால கோட்டை

திருவண்ணாமலை – வியப்பூட்டும் மன்னர் கால கோட்டை

திருவண்ணாமலை:வியப்பூட்டும் மன்னர் கால கோட்டை

1200 அடி உயர மலை மீதுள்ள கோட்டையை சிறைச்சாலையாக பயன்படுத்திய ராஜா தேசிங்கு. வற்றாத சுனையில் உள்ள நீரை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் மக்கள்.

திருவண்ணாமலை அருகே 1200 அடி உயர மலை மீதுள்ள இந்த மன்னர் கால கோட்டையை அழியாமல் காப்பாற்றி சுற்றுலா பயணிகள் வரும் அளவிற்கு தகுந்த வசதிகளை செய்து தர வேண்டும் என  அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.        

மன்னர் கால கோட்டைகள்

நாடாண்ட மன்னர்கள் இறைவழிபாட்டை உணர்த்த இமயம் வரை குமரி வரை கோவிலையே கட்டினார்கள். கோவில்களில் ஆங்காங்கே பாராயணம் படிக்கப்பட்டது. வருபவர்களுக்கு தருமசாலை அமைத்து பசிப்பிணி தீர்க்க அன்னம் வழங்கப்பட்டது. பின்னர் அந்நியரின் படையெடுப்பால் பல கோவில்களும் கோட்டைகளும் சிதைக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் வைர வைடூரியங்கள் களவாடப்பட்டு¸ சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசர் காலத்து கோயில்கள் ஏராளமாக உள்ளன. சிதிலமடைந்த கோயில்களும் உள்ளன. மன்னர் கால கோட்டை சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன. கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள பர்வதமலை மல்லிகார்ஜூனர் கோயில் 4560 அடி உயர மலையில் அமைந்திருக்கிறது. கோயிலுக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய கோட்டை தென்படும். இதே போன்று ஆரணி எஸ்.வி.நகரத்திலும்¸ வந்தவாசியிலும் மன்னர் கால கோட்டைகள் கவனிப்பாரற்று சிதிலமடைந்துள்ளன. 

அந்த வகையில் திருவண்ணாமலை அருகே 1200 அடி உயர மலை உச்சயில் உள்ள கோட்டை பாழடைந்து போய் வருத்தப்படக் கூடிய நிலையில் காணப்படுகிறது. திருவண்ணாமலையிலிருந்து மங்கலம் செல்லும் வழியில் உள்ளது துர்க்கம் எனும் கிராமத்தில் தான் இந்த கோட்டை அமைந்திருக்கிறது. 

மன்னன் திம்மப்பர் 

1200 அடி உயர மலை மீது கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் திம்மப்பர் பூஜித்து வழிபட்ட சுயம்பு ஆதி சக்தியம்மன் கோவில் உள்ளது. போருக்கு செல்லும் முன் அம்மன் பாதத்தில் வாளை வைத்து வழிபட்டு வணங்கிவிட்டுதான் போருக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார் திம்மப்பர். இக்கோயில் அருகே பல கல்வெட்டுகள் உள்ளனர். இவற்றை ஆராய்ந்தால் இன்னும் அறிய கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம். 

புதர் மண்டிய பாதைகள்

துர்க்கை கிராமத்தில் திம்மப்பர் பயன்படுத்திய மலையைச் சுற்றி வீடுகட்டும்போது செப்பு நாணயங்களும்¸ உலக்கைகள்¸ உரல்கள்¸ செப்பு தகடுகள்¸ பீங்கான் கின்னங்கள்¸ வாள்கள் போன்றவை கிடைத்துள்ளன. விஜயநகர பேரரசர்களின் சிற்றரசர்களான வேலூரை மையமாகக் கொண்டு திம்மப்பர் பொம்மப்பர் என இருசகோதரர்களும் ஆட்சி செய்தபோது திம்மப்பர் தனது 3 மனைவிகளுக்காக துர்க்கத்தில் 1200 அடி உயரத்தில் கோட்டை கட்டினார். தன் மூன்று மனைவிகளுக்கும் 3 குளத்தை வெட்டினார். கோட்டைக்கு பின்புறள்ள காட்டுபகுதியில் அல்லிக்குளமும் கோட்டைக்குமுன் தன் மனைவி பூசாவுக்கு கட்டிய பூசாகுளமும் அதன்அருகே ஆசா குளமும் என கோட்டை பகுதியில் சிறிய பூங்காவை அமைத்திருக்கிறார். கோட்டையை சுற்றி அகழிகள் இருந்தும் பின்னர் அது காலப்போக்கில் காணாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை:வியப்பூட்டும் மன்னர் கால கோட்டை

வற்றாத சுணை

கோட்டையில் இரண்டு சுணைகள் உள்ளன. வறட்சி காலங்களிலும் எப்போதும் வற்றியதாக இல்லை. மற்றொரு சணை சூரியனே எட்டிப்பார்க்க முடியாதபடி உள்ளது. இந்த வற்றாத சுணையில் இருந்துதான் சுயம்பு ஆதிசக்திஅம்மனுக்கு அபிஷேகம் செய்ய நீரை பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் அம்மனுக்கு துர்க்கம் கிராம மக்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கோட்டைக்குள் உள்ள கட்டிடங்கள் மஹால்கள் கோட்டை சுவரேறி எதிரிகளை கண்காணிக்கும் மூன்று துவாரங்கள் என அனைத்தும் அந்நிய படையெடுப்பில் சிதிலமடைந்து இன்று மண்மேடாக உள்ளன.  ஆனால் இப்பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன.

திருவண்ணாமலை:வியப்பூட்டும் மன்னர் கால கோட்டை

மாவீரன் ராஜாதேசிங்கு 

கி.பி. 1796ம் ஆண்டு செஞ்சியை ஆண்ட மாவீரன் ராஜாதேசிங்குக்கு துர்க்கம் கிராமத்தில் உள்ள கோட்டையை சிறைச்சாலையாக பயன்படுத்தியதாகவும் கைதிகளை பீரங்கியில் கட்டி வைத்து துப்பாக்கியால் சுட இந்த கோட்டையை பயன்படுத்தியதாக ஒருசாரார் கூறுகின்றனர். இங்கிருந்து செஞ்சி கோட்டைக்கு சுரங்க பாதை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

சுயம்பு சக்தியம்மன்

இன்றும் கிராமத்தில் உள்ளவர் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ளவர்களும் மலையில் வெட்ட வெளியில் உள்ள சயம்பு அம்மனை வழிபட்டு வருகின்றனர். வறட்சி காலங்களிலும் இந்தஅம்மனுக்கு வற்றாத சுணையில் இருந்து 108 குடம் தண்ணீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் மலையை விட்டு கீழே இறங்கும் முன்னே மழைபொழியும் என்பது இந்த அம்மனின் சிறப்பு என்று கிராம மக்களால் பேசப்படுவது வியப்பாக உள்ளது.

திருவண்ணாமலை:வியப்பூட்டும் மன்னர் கால கோட்டை

படி அமைக்கும் பணி

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுக்கு அருள்வாக்கு வந்து சாமியாடியது. அப்போது எனக்கு மலைமீது கோவில் கட்ட வேண்டாம். அப்படி நீங்கள் கோவில் கட்டினால் ஒரே நாளில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் செய்வீர்களா என்று கேட்டு அந்த பெண் பக்தர் மயங்கிவிழுந்தார். பின்னர் கிராம மக்கள் கோவில் கட்டுவதையே கைவிட்டனர். இப்போது மழை வெயில் காலங்களில் வெட்டவெளியில் உள்ள அம்மனுக்கு மேற்கூரை அமைத்து வழிபடுகின்றனர். மேலும் கோட்டைக்கு செல்ல ஏதுவாக படியமைக்கும் பணியும் துரிதமாக செய்துவருவதுடன் 1200 அடி உயரத்தில் வேப்பமரத்தடியில் உள்ள அம்மனுக்கு இரவில் அதிக சக்திவாய்ந்த விளக்குகளை பயன்படுத்தி ஒளிரச் செய்கின்றனர். இதனால் இரவில் நிசப்தமாக இருக்கும் கிராமங்களுக்கு மத்தியில் கோட்டையில் விளக்கெறிவது அம்மன் மக்களை காப்பதாக நம்புகின்றனர்.

திருவண்ணாமலை - வியப்பூட்டும் மன்னர் கால கோட்டை

கிடாவெட்டி பொங்கல் 

ஆதிசக்தியம்மனுக்கு பவுர்ணமி நாட்களிலும் ஆண்டுதோறும் ஆடியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அப்போது கிராம மக்கள் நேர்த்திக் கடனாக 5 வெள்ளிக்கிழமையில் கிடாவெட்டி பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதைக் காண வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பிழைப்புத்தேடி வெளிநாடு சென்றவர்களும் ஆயிரக்கணக்கில் மலைமீது ஒன்று கூடுவது இத்தலத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.

அதிகம் அறியப்படாத ஒரு கிராமத்தில் எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு கோட்டை ஆதிசக்தியம்மனுக்கு உள்ளது. 

திருப்பணி

மலைமீது உள்ள அம்மனுக்கு அடிவாரத்தில் இருந்து படிஅமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்கு பொருளுதவியோ பண உதவியோ தந்து அம்மனின் அருளை பெறலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோட்டையை காப்பாற்றி சுற்றுலா பயணிகள் வரும் அளவிற்கு தகுந்த வசதிகளை செய்து தர வேண்டும் என அரசுக்கு  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அமைவிடம்

திருவண்ணாமலையில் இருந்து மன்சூராபாத் செல்லும் அனைத்து பேருந்துகளும் துர்க்கம் நின்று செல்லும்.

தொடர்புக்கு

தர்மகர்த்தா ந.அருணாசலம் 8940255236

எஸ்.கிருஷ்ணமூர்த்தி 9943945105

எஸ்.மணி 8122555882

– ப.பரசுராமன்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!