கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த திருவண்ணாமலை நீச்சல் குளம் மீண்டும் திறக்கப்படுவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
நீச்சல் போட்டி
உடற்பயிற்சிக்கு சிறந்தது குதிரையேற்றமும்¸ நீச்சலும் ஆகும். புத்துணர்வையும்¸ உற்சாகத்தையும் தண்ணீரில் நீந்துவதன் மூலம் பெறலாம். நீச்சலை ஊக்குவிக்கும் வண்ணம் நீச்சல் போட்டி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. தமிழக அரசின் விளையாட்டுத் துறை மூலமாகவும் நீச்சல் போட்டிகள் நடைபெறுகிறது.
கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விவசாய கிணறு போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று குளித்து வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர். கோடை காலத்தில் நீச்சல் குளங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். புதியதாக நீச்சல் கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கட்டணம் குறைவு
திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் தனியார் நீச்சல் குளங்கள் இருந்தாலும் கட்டணம் குறைவு என்பதால் சிறுவர்களும்¸ இளைஞர்களும் இங்கு படையெடுத்து வருவர்.
தமிழ்நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு 24.03.2020 முதல் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டு¸ தற்போது பல்வேறு தளர்வுகளுடன் 31.03.2021 வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நீச்சல் குளங்கள் மூடப்பட்டன.
வழிகாட்டு நெறிமுறை
இதனால் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளம் கடந்த 11 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. ஊடரங்கு தளர்வு அறிவிப்பால் நீச்சல் குளங்கள் எப்போது திறக்கப்படும் என சிறுவர்களும்¸ இளைஞர்களும் ஆர்வமுடன் எதர்பார்த்திருந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நீச்சல் குளத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டிருந்தது.
இதையடுத்து திருவண்ணாமலை விளையாட்டரங்க நீச்சல் குளம் திறக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று அறிவித்துள்ளார். இதுசம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது¸
முகக்கவசம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த மாவட்ட விளையாட்டரங்க நீச்சல்குளத்தில் தற்பொது பொதுமக்கள் பயன்படுத்திடவும்¸ விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல்குளத்தினை பயன்படுத்த வருபவர்கள் உரிய நீச்சல் உடையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நீச்சல்குளத்தினை பயன்படுத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் நீச்சல்குள வளாகத்தில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள்
10 வயதிற்குட்டபட்டவர்கள்¸ 64 வயதிற்கு மேற்பட்டவர்கள்¸ கர்ப்பிணி பெண்கள்¸ தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் நீச்சல்குளத்தினை பயன்படுத்திட எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கப்படமாட்டாது. கைகள் அழுக்காக இல்லாத போதும் கைகளை சொப்பினை பயன்படுத்தி சுத்தம் செய்தல் வேண்டும். ஆல்கஹால் சானிடைசர்களை சாத்தியமான இடங்களில் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நீச்சல்குளத்தினை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கலெக்டரின் இந்த அறிவிப்பு நீச்சல் விரும்பிகளை குஷி அடையச் செய்துள்ளது.
50 ரூபாய்
இங்கு ஆண்களுக்கு தனியாகவும்¸ பெண்களுக்கு தனியாகவும் நீச்சல் குளம் உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த நீச்சல் குளத்தில் சிறுவர்களுக்கு 1 மணி நேரத்திற்கு 25 ரூபாயும். பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.