வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு ஓட்டு போடுமாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 06.04.2021 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடிஅண்ணாமலை ஊராட்சி கூட்டுறவு நியாய விலைக் கடையில் இன்று (16.03.2021) சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி¸ கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் க. ராஜ்குமார்¸ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் த. காமாட்சி¸ திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பா. சந்திரா¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார்¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம்¸ தேர்தல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் விழிப்புணர்வு டேக் (TAG) மற்றும் ஸ்டிக்கர்களை சமையல் எரிவாயு உருளைகள்¸ தண்ணீர் கேன்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களில் ஒட்டி¸ கலெக்டர் சந்தீப் நந்தூரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து அவர் அண்ணாமலை கூட்டுறவு நியாய விலைக் கடையில் 100சதவீதம் வாக்களிப்போம்¸ வாக்காளர் உதவி எண். 1950 ஆகிய வாசகங்கள் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் துணிப் பையில் அச்சிடப்பட்டும்¸ பாமாயில் பாக்கெட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும்¸ பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும்¸ 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து¸ அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வந்திருந்த வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தார்.
அப்போது அவர்களிடையே கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார். அவர் பேசியதாவது¸
ஆன்லைனில் பார்த்தாலும்¸ பேப்பரை படித்தாலும் உங்க வேட்பாளர்கள் என்ன சொல்லறாங்க¸ என்ன செய்ய போறாங்க என்பது தெரியும். அதையெல்லாம் பார்த்து தெரிந்து கொண்டு சரியான வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். யாருமே பிடிக்கவில்லை என்றால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள கடைசி பட்டனான நோட்டாவை பிரஸ் செய்யுங்க. கட்டாயம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். பணம்¸ பரிசு பொருள் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டீர்கள் என்றால் உங்கள் ஓட்டு விற்பனைக்கு என்று பொருள். அதற்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.