திருவண்ணாமலை அருகே காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அருகே உள்ள மேலாரணி கிராமத்தைச் சேர்ந்தவர் பர்வதம். இவரது மகன் பிரகாஷ்(வயது 25). சொந்தமாக டிராக்டர் வாங்கி அதை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தார். இவரும்¸ அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களது காதல் பெண் வீட்டார்களுக்கு தெரிய வந்தது. பெண் வீட்டார் வசதியானவர்கள் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 14ந் தேதி வீட்டை விட்டு சென்ற பிரகாஷ் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தன்னை 10 பேர் துரத்துவதாக பிரகாஷ் தனது நண்பரிடம் சொன்னதாகவும்¸ பிறகு அவரது போன் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நண்பர்கள் தேடிச் சென்ற போது அவர் கீழ்தாங்கல் கிராமம் செல்லும் வழியில் முகம் சிதைந்த நிலையிலும்¸ கருகிய நிலையிலும் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அந்த கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரில் சென்று விசாரணை நடத்தினார். காதல் தகராறில் பிரகாஷை அடித்துக் கொன்று விட்டதாகவும்¸ குற்றவாளிகளை கைது செய்யவும் கிராம மக்களும்¸ உறவினர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இன்று காலை அவர்கள் அந்த கிராமத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார்¸ துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனி¸ அறிவழகன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களோடு பேச்சு வார்தை நடத்தினார்கள் .
இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். கொலை வழக்கு பதிவு செய்து¸ கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்களும்¸ உறவினர்களும் தெரிவித்து விட்டதால் பிரேத பரிசோதனை முடிந்தும் பிரகாஷின் உடல் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே உள்ளது.
பிரகாஷ் உடல் இருந்த இடத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் மின்சார வேலி அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அடித்துக் கொலை செய்யப்பட்ட பிறகு பிரகாஷ் உடலை மின்சார வேலியில் தூக்கி வீசி இருப்பதாக உறவினர்கள் சந்தேகப்படுகின்றனர். இது சம்மந்தமாக அந்த நிலத்தின் உரிமையாளர் உள்பட 10 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.