Homeஅரசியல்சோதனைக்கு காரணம் சாவல்பூண்டி ஆடியோதானாம்

சோதனைக்கு காரணம் சாவல்பூண்டி ஆடியோதானாம்

சாவல் பூண்டி ஆடியோவே சோதனைக்கு காரணம் 

சாவல்பூண்டி சுந்தரேசன் பேசியதை கொண்டே எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் ஒரு பைசா கூட கைப்பற்றப்படவில்லை எ.வ.வேலு விளக்கம்  அளித்துள்ளார். 

 ரூ.3கோடியே 50 லட்சம்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் இன்று மாலை வரை சோதனையில் ஈடுபட்டனர். இதில் 3கோடியே 50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது 

இந்நிலையில் இந்த சோதனை குறித்து எ.வ.வேலு இன்று மாலை 6 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் அவர் கூறியதாவது¸

110 அதிகாரிகள் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் உதயசூரியன் நிற்கிறது. 8 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்வதற்காக இரவு பகல் பார்க்காமல் தேர்தல் பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் வருமான வரித்துறை துணை இயக்குனர் ராஜ மனோகரன் தலைமையில் 110 அதிகாரிகள் எனக்கு சம்பந்தப்பட்ட 10 இடங்களில் இன்று மாலை 5 மணி வரை சோதனைகளில் ஈடுபட்டனர். 

உள்நோக்கத்துடன் சோதனை

30 வருடங்களாக எனது குடும்பத்தார் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர் நானும் சட்டமன்ற தேர்தல்களில் நின்றிருக்கிறேன் நாடாளுமன்றத் தேர்தலை எனது தலைமையில் கழகம் சந்தித்திருக்கிறது அப்போதெல்லாம் வராத வருமான வரித்துறை இப்போது வர காரணம் என்ன? திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த சோதனை நடைபெற்று இருக்கிறது. இதன் காரணமாக எனது தேர்தல் பணிகள் இரண்டு நாட்களாக முடக்கப்பட்டுள்ளது வாக்காளர்களை சந்திக்க முடியவில்லை பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை பொதுக் கூட்டத்திற்கும் செல்லவில்லை 

அதிகாரிகள் அம்பு

தேர்தலை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த சோதனை நடைபெற்றிருக்கிறது. வந்த அதிகாரிகள் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறீர்கள்? எவ்வளவு பணம் கொடுக்கப் போகிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்டனர். பணநாயகம் மூலம் ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியாது. அந்த அதிகாரிகள் என்ன செய்வார்கள்? அவர்கள் வெறும் அம்பு. அம்பை நோக முடியாது அதை எய்தவர்களைத்தான் நோக முடியும். எய்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள். 

ஒரு பைசா கூட இல்லை

சோதனையில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. ஒரு பைசா கூட கைப்பற்றப்படவில்லை. இருந்தால்தானே கைப்பற்ற முடியும்? அப்படி இருக்க செய்தி வந்தது எப்படி? இந்தச் செய்தியை சொன்னது யார்? ஸ்டாலின் மீதும்¸ இந்த இயக்கத்தின் மீதும்¸ என் மீதும் உள்ள நல்லெண்ணத்தை சீர் குலைக்கவே இந்த மாதிரி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கால் ஊன்ற கூடாது என்பதற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தது உண்மை. ஆன்மீகமும்¸ பகுத்தறிவும் பின்னிப் பிணைந்த மண் இந்த மண். 

திமுகவிற்கு வலு

அண்ணாமலையார் கோவிலை மீட்டது திராவிட முன்னேற்ற கழகம். அண்ணாமலையார் கோவிலை மூடச் சொன்னது பாரதிய ஜனதா கட்சி. ஆன்மீக நகரங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று விடும் என்ற இமேஜை உருவாக்கிட இந்த நடவடிக்கையை டெல்லியில் இருந்து சொல்லி எடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட முடியாது. இந்த சோதனையால் மக்கள் மத்தியில் இன்னும் திமுகவிற்கு வலு கூடியுள்ளது. பின்னடைவு ஏற்படவில்லை. நாளை முதல் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளேன். நேரம் காலம் பார்க்காமல்¸ தூங்காமல் உதயசூரியன் வெற்றி பெறவும்¸ஸ்டாலின் முதல்வராகவும் உழைக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

இதையடுத்து பேசிய திமுகவின் சட்டப்பிரிவு வழக்கறிஞர் விடுதலை கூறியதாவது¸

சட்டத்திற்கு புறம்பானது

பிப்ரவரி 2ஆம் தேதி யாரோ வெளியிட்ட ஆடியோவிற்காக இப்போது சோதனை ஏன்? தகவல் வந்ததாக சொல்கிறார்கள். வலுவான முகாந்திரம் இல்லாமல்¸ தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த சோதனை சட்டத்திற்கு புறம்பானது. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியான ஆடியோவிற்கு¸ மார்ச் மாதத்திற்கு முன்பாகவே இந்த சோதனையை மேற்கொண்டு இருக்க முடியாதா? அல்லது ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு மேற்கொண்டு இருக்க முடியாதா? 

தேர்தல் கமிஷனிடம் புகார்

எந்த ஆவணமும் பணமும் கைப்பற்றபடாத சூழ்நிலையில் யாரோ எடுத்து யாரோ வாங்கினார்கள் என மூன்றரை கோடி ரூபாயை கைப்பற்றியதாக சொல்கிறார்கள். எங்கே கைப்பற்றினார்கள்? யாரிடம் கைப்பற்றினார்கள? அவசரம் அவசரமாக இதை வெளியிட்டதில் உள்நோக்கம் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கூடிய அளவிற்கு சட்டத்திற்கு புறம்பானது. இதுதான் சட்டத்தின் நிலைப்பாடு. இதைத்தான் தேர்தல் கமிஷனிடம் புகாராக கொடுத்துள்ளோம். ஸ்டாலின் வந்த வேனிலும் சோதனை நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்

சாவல்பூண்டி பிரச்சாரம் 

எ.வ.வேலுவுக்கு 8 காலேஜ் இருக்கு. தமிழ்நாட்டில் 6ஆயிரம் ஏக்கர் நிலம்¸ ஸ்பின்னிங் மில் உள்ளது. கிரானைட் மில் உள்ளது. மெடிக்கல் காலேஜ் உள்ளது. கரூரில் ரூ.500 கோடியை பைனான்ஸில் விட்டுள்ளார். சினிமாவுக்கு பைனான்ஸ் செய்கிறார். சினிமா தயாரிக்கிறார். டிவி தொடர் எடுக்கிறார். 6 தடவை எம்.எல்ஏ¸ ஒரு தடவை மந்திரி¸ 20 வருடமாக மாவட்ட செயலாளர் என்றெல்லாம் திமுக நிர்வாகியிடம்¸ திமுக மாவட்ட துணைச் செயலாளராக இருந்த சாவல்பூண்டி சுந்தரேசன் பேசி இருந்தார். இதன் காரணமாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட பிறகு அவர் சாவல்பூண்டி ஊராட்சியில் எ.வ.வேலுவுக்கு உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!