திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சாவல்பூண்டி சுந்தரேசன் எ.வ.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுகவில் பரபரப்பு
எ.வ.வேலுவுக்கு 8 காலேஜ் உள்ளது. தமிழ்நாட்டில் 6ஆயிரம் ஏக்கர் நிலம்¸ ஸ்பின்னிங் மில் உள்ளது. கிரானைட் மில் உள்ளது. மெடிக்கல் காலேஜ் உள்ளது. கரூரில் ரூ.500 கோடியை பைனான்ஸில் விட்டுள்ளார் என திமுக பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருந்த சாவல்பூண்டி சுந்தரேசன்¸ திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக பேசியதால் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டார். சாவல்பூண்டி சுந்தரேசன் குற்றச்சாட்டுக்கு எ.வ.வேலு மறுப்பு தெரிவித்திருந்தார்.
எ.வ.வேலு அதிர்ச்சி
சாவல்பூண்டி சுந்தரேசன்¸ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு திமுகவினர் சிலர் சமூக வலைத்தளங்களில் அவரைப்பற்றி அவதூறு பரப்பவே அதற்கு அரண்மனை ரகசியங்கள் அறிந்தவன் நான். உண்மைகளை ஒரு நாள் சொல்வேன் என சாவல்பூண்டி பதிலளித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எ.வ.வேலு தேர்தல் நேரத்தில் பிரச்சனை செய்யாதீர்கள் என திமுகவினரை அடக்கினார்.
திமுகவின் கோட்டை
சாவல்பூண்டி ஊராட்சி திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில் சாவல்பூண்டியில் தொடர்ந்து திமுகதான் வெற்றி வருகிறது. சாவல்பூண்டி சுந்தரேசனைத்தான் ஊராட்சி மன்றத் தலைவராக ஊர்மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் அவரது மனைவி தலைவர். போட்டியின்றியும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது மட்டுமன்றி சென்ற முறை திருவண்ணாமலை மாவட்டத்திலேயே கிராம அளவில் அதிக சதவீதம் உதயசூரியனுக்கு வாக்களித்த ஊர் சாவல் பூண்டி தான்¸ இப்படி சாவல்பூண்டியை திமுகவின் கோட்டையாக மாற்றி சுந்தரேசன் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால் அவர் இல்லாமல் எப்படி வாக்கு கேட்பது என திமுக தேர்தல் பணிக்குழு தயங்கி வந்தது.
வாக்கு சேகரிப்பு
பிறகு எ.வ.வேலுவின் உறவினர் பொன்.முத்து மூலம் சாவல்பூண்டி சுந்தரேசனிடம் பேசப்பட்டது. பிரச்சாரத்திற்கு வர அவர் சம்மதிக்கவே தேர்தல் பணிக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதையடுத்து சாவல்பூண்டி சுந்தரேசன்¸ பொன்.முத்து மற்றும் தி.மு.கவினர் சாவல்பூண்டியில் வீடு¸ வீடாக சென்று உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரித்தனர்.
இது பற்றி சாவல்பூண்டியில் சுந்தரேசன் தனது பதிவில் நான் 50 ஆண்டுக்கு மேலாக உதயசூரியனுக்கு உழைத்தவன், உதயசூரியனுக்கு வாழ்ந்தவன்¸ உதயசூரியனுக்கு வாழ்பவன் என் ஊரும் அப்படித்தான். எத்தனையோ பேரை வாழ வைத்திருக்கிறேன்¸ துணை போய் இருக்கிறேன்¸ புகழ் பாடி இருக்கிறேன்¸ போற்றி புகழ்ந்து இருக்கிறேன்¸ வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அவர்களெல்லாம் நன்றி மறந்து போன சூழ்நிலையில் ஊர் மக்கள் தன்னோடு இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசியலில் நன்றியில்லை
எது பேசியிருந்தாலும்¸ ஊர் மக்கள்¸ இயக்கத் தோழர்கள்¸ இயக்கத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்¸ பாதிக்கப்பட்டவர்களுடைய பிரதிநிதியாகத்தான் பேசி இருப்பேனே தவிர என்றைக்கும் சுய நலத்திற்காக பேசியது இல்லை. பேசவும் மாட்டேன். செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்ட தொண்டர்களுக்காக பேசியிருக்கிறேன் எனவும் கூறியிருக்கிறார்.
நன்றி என்பது அரசியலில் இருக்காது என்பதை சமீப காலத்தில் மிகத் தெளிவாக புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.