திருவண்ணாமலையில் நேற்றிரவு பெண் அரசு ஊழியர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வினோதா(வயது 23). இவர் இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் தட்டச்சு எழுத்தராக பணியாற்றி வந்தார்.
ஒன்றரை வருடத்திற்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதித்துறையில் தட்டச்சு எழுத்தராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கும் அதே நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய சுந்தர்ராஜ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து காதலர்கள் இரண்டு பேரும் திருவண்ணாமலை¸ வேங்கிக்கால்¸ இந்திரா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இது 2 பேரின் பெற்றோர்களுக்கும் தெரியாது என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வினோதாவிற்கு அவர்களின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இது பற்றி சுந்தர்ராஜிடம் வினோதா கூறினார். அப்போது இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுந்தர்ராஜன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
நேற்றிரவு 9 மணி அளவில் வினோதா வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு இறந்து உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு வந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார், வினோதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த வினோதாவின் நெற்றியில் உள்ள வெட்டு தழும்பு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே இது கொலையா?அல்லது தற்கொலையா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.