Homeஅரசியல்எ.வ.வேலு சொத்து விவரம்

எ.வ.வேலு சொத்து விவரம்

எ.வ.வேலு சொத்து விவரம்

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனக்கும்¸ தனது மனைவிக்கும் உள்ள சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.

நல்ல நேரம் பார்த்து 

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து 3 வது முறையாக போட்டியிடும் எ.வ.வேலு நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நேற்று திங்கட்கிழமை 10-30 மணி முதல் 12 மணி வரை எம கண்டம் என்பதால் அந்த நேரத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வதை பெரும்பாலான வேட்பாளர்கள் தவிர்த்தனர். மேலும் நல்ல காரியங்களை தொடங்கவும்¸ சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த புதன் ஓரையில் வேட்பாளர்கள் மனுவை தாக்கல் செய்தனர். எ.வ.வேலுவும் இதை கடைபிடித்து வேட்பு மனுவை அளித்தார்.

சொத்து குறித்த ஆடியோ

பிறகு தனக்கு ராசியான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பிருந்து பிரச்சாரத்தை துவக்கினார். எ.வ.வேலுவுடன் நெருக்கமாக இருந்த மாவட்ட திமுக துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் சமீபத்தில் திமுக நிர்வாகியிடம் பேசிய ஆடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் எ.வ.வேலுவுக்கு 8 காலேஜ்¸ தமிழ்நாட்டில் 6ஆயிரம் ஏக்கர் நிலம்¸ ஸ்பின்னிங் மில் உள்ளது. கிரானைட் மில் உள்ளது. மெடிக்கல் காலேஜ் உள்ளது. கரூரில் ரூ.500 கோடியை பைனான்ஸில் விட்டுள்ளார். சினிமாவுக்கு பைனான்ஸ் செய்கிறார். சினிமா தயாரிக்கிறார். டிவி தொடர் எடுக்கிறார் என பேசி இருந்தார். அதற்கு எ.வ.வேலு வருமான வரித்துறைக்கு என்ன கணக்கு காட்டினேனோ அதிலிருந்து ஒரு செண்ட் இடமோ¸ பணமோ என்னிடத்திலோ¸ எனது குடும்பத்தாரிடத்திலோ இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தார். பிறகு சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று தாக்கல் செய்த வேட்பு மனுவில் எ.வ.வேலு சொத்துக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு¸

மொத்தம் 7 வழக்கு

எ.வ.வேலுவின் வயது 71. சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம்¸ தண்டராம்பட்டு வட்டம் இவர் மீது பெட்ரோல்¸ டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்¸ பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி சாலைமறியல்¸ காவேரி ஆணையம் அமைக்க ரயில் மறியல் ஆகிய போராட்டங்களை நடத்தியதற்காகவும்¸ கொரோனா காலத்தில் கிராம சபை நடத்தியதாகவும்¸ தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் மொத்தம் 7 வழக்குகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எ.வ.வேலு சொத்து விவரம்

அசையும் சொத்து

தனது பெயரில் அசையும் சொத்து ரூ.6கோடியே 9 லட்சத்து 35ஆயிரத்து 408 எனவும்¸ தனது மனைவி சங்கரி பெயரில் ரூ.95லட்சத்து 70ஆயிரத்து 932ம் உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது பெயரில் சுயமாக வாங்கிய சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.8கோடியே 46 லட்சத்து 21ஆயிரம் எனவும்¸ மனைவி பெயரில் ரூ.7கோடியே 81 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார்.

ரூ.4 கோடி கடன்

சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளையில் முன்பணமாக ரூ.4லட்சம் பெற்றிருப்பதாகவும்¸ ஜீவா கல்வி அறக்கட்டளையில் முன்பணமாக ரூ.4லட்சம் பெற்றிருப்பதாகவும்¸ அருணை மோட்டார் பைனான்சில் ரூ.2கோடியும்¸ தனது மகன் எ.வ.குமரனிடம் ரூ.2கோடியும் கடன் பெற்றிருப்பதாகவும் தனக்கு மொத்தம் ரூ.4 கோடியே 8 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்கு 

தன்னிடம் ரூ.6லட்சத்து 58 ஆயிரத்து 750 மதிப்புள்ள 250 கிராம் தங்க நகைகளும்¸ தனது மனைவியிடம் ரூ.9லட்சத்து 52ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளும்¸ வங்கிகளில் தனது பெயரில் ரூ.8லட்சத்து 42ஆயிரத்து 697ம்¸ மனைவி கணக்கில் ரூ.42ஆயிரத்து 652ம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வருவாய்க்கான ஆதாரம் 

தனக்கு விவசாயம்¸ விவசாயம் சார்ந்த தொழில்கள்¸ பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் நிகர லாபத்தில் வரும் பங்குத் தொகை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஊதியம் ஆகியவற்றின் மூலமாகவும்¸ தனது மனைவிக்கு விவசாயம்¸ வாடகைகளிலிருந்தும் வருவாய் கிடைப்பதாக தெரிவித்துள்ள எ.வ.வேலு தனது மகன்கள் மீதான சொத்து விவரம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. தன் மீதும்¸ தனது மனைவி மீதும் உள்ள சொத்துக்களை தவிர தன்னை சார்ந்திருப்பவர்களுக்கு சொத்து ஏதும் இல்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!