திருவண்ணாமலை கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு நாளில் மன்மதனை அண்ணாமலையார் எரித்து சாம்பலாக்கினார்.
வசந்த உற்சவ விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 16 ஆம் தேதி தங்க கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகர் கோயில் முன்பு பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து 17 ஆம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக இரவு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகே உள்ள நான்கு கால் மண்டபத்தில் சாமி மீது பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
மன்மத தகனம்
வசந்த உற்சவ விழாவின் பத்தாம் நாளான இன்று அண்ணாமலையார் கோவிலில் மன்மத தகனம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
இன்று மாலை அலங்கார மண்டபத்தில் பெரிய பட்டம் ராஜன் சிவாச்சாரியார் வேதாகம மந்திரங்கள் முழங்க அண்ணாமலை யாருக்கும் பராசக்தி அம்பாளுக்கும் மிக விமர்சையாக சோடச உபசாரம் என்று அழைக்கக்கூடிய பதினாறு வகை தீபாராதனைகள் காட்டி இறுதியாக மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆனந்த நடனமாடி சுவாமியும் அம்பாளும் மூன்றாம் பிரகாரம் வலம் வந்து அம்பாள் எதாஸ்தானம் சென்றடைய அண்ணாமலையார் உள்துறை அலுவலக மண்டபத்தில் எழுந்தருளினார்.
எரிந்து சாம்பல்
இதைத் தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அண்ணாமலையார் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை கையில் வில்லோடு அண்ணாமலையார் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை¸ அண்ணாமலையார் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேறியது. அண்ணாமலையார் முன்பிருந்து சீறி பாய்ந்த வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்து விட்டு எரிந்தது. இதில் மன்மத உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்மவினைகள் போவதற்கும் பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்துச் சென்றார்கள். உலகத்தில் எந்த ஒரு சிவாலயங்களிலும் இந்த மன்மத தகனம் நிகழ்வு நடைபெறுவதில்லை அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
வானவேடிக்கை
அதன் பிறகு கண்கவர் வானவேடிக்கை நடைபெற்றது. மன்மத தகனத்தை கோயிலில் இருந்தவர்கள் புஸ்வானம் கொளுத்தி கொண்டாடினர். கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைப்படி அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் இன்றி மன்மத தகனம் நடைபெற்றது.