- ப.உ.சண்முகம் 24 வயதில் நகராட்சி தலைவர் பதவியை வகித்தவர். அதிமுக பொது செயலாளராக இருந்தவர். இடைத்தேர்தலில் காமராஜர்¸கக்கன் 7 அமைச்சர்கள் பிரச்சாரத்தை முறியத்து வெற்றி கொடியை நாட்டியவர்.
சுதந்திரம் பெற்ற பிறகு திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி 16வது தேர்தலை சந்திக்கிறது. இந்நேரத்தில் அகமுடையர் இனத்தில் உதித்து திருவண்ணாமலை தொகுதியில் சாதனை படைத்த ப.உ.சண்முகத்தின் பெருமைகளை விளக்குகிறது இக் கட்டுரை.
ஆன்மீக பூமியான அண்ணாமலை, தமிழக அரசியல் வரலாற்றிலும் முக்கிய இடம் வகிக்கிறது. திருவண்ணாமலை அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக ப.உ.சண்முகம் இருந்து இருக்கிறார்.
தொடர்ந்து 25 ஆண்டுகள்
தனது 24 வயதில் திருவண்ணாமலை நகராட்சி தலைவராக பதவி ஏற்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நகராட்சி தலைவராக பணியாற்றியவர். திமுக வில் மிக இளம் வயதில் நகராட்சி தலைவர் பதவியை ஏற்ற சிறப்புக்கு உரியவர். விடுதலை பெற்ற ஆண்டான 1947-ல் இவர் நகராட்சி தலைவர் ஆனார். அது மட்டுமல்ல இவர் நகராட்சி மன்ற உறுப்பினராக 25 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தவர்.
1957ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட 15 சட்ட மன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். அப்போது புத்தும் புது பியட் காருடன் சென்ற வசதியானவர். பெரும் செல்வந்தர். திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிலும் மூன்று முறை எம்.எல்.சியாக இருந்து இருக்கிறார்.
இடைத்தேர்தல்
செக்க செவந்த மேனி கொண்ட ப.உ.ச. திருவண்ணாமலை 1962 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழனிப்பிள்ளை என்பவரிடம் தோல்வி அடைந்தார். பழனிப்பிள்ளை திடீரென இயற்கை ஏய்திட 1963 ம் ஆண்டு திருவண்ணாமலை இடைத்தேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் பிரபலமான டி.எஸ்.பத்ராசலம் பிள்ளை போட்டியிட்டார். திமுக சார்பில் ப.உ.சண்முகம் போட்டியிட்டார். அப்போது தமிழகத்தின் முதல்வராக கே.காமராஜர் இருந்தார்.
அரசியலில் உச்சம்
இடைத்தேர்தலில்,தமிழக முதல்வராக இருந்த காமராஜர்,கக்கன், சி.சுப்பிரமணியன்,பூவராகவன்,மஜீத்,கோவிந்தசாமி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் திருவண்ணாமலையிலேயே தங்கி ப.உ.ச வை எதிர்த்து, காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். மிக கடுமையான போட்டி. யார் வெற்றி பெறுவார்கள் என கணிக்க முடியாத சூழல். 1963ல் நடைபெற்ற திருவண்ணாமலை இடைத்தேர்தலில் திமுக வை சேர்ந்த ப.உ.சண்முகம் மாபெரும் வெற்றி பெற்றார். இதன் மூலம் அரசியல் வானில் உச்ச நிலையை தொட்டார். அப்போது ஓர் இதழ் இவரைப்பற்றிய கட்டுரையில் “டில்லிக்கு பாதுஷா ! திருவண்ணாமலைக்கு ப.உ.ச!!” என புகழாரம் சூட்டியது.
பாம்பன் பாலம்
கலைஞர் முதல்வராக இருந்தபோதும்,எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோதும் அமைச்சரவையில் இடம் பெற்றவர் இவர். உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை,தொழிலாளர் நல அமைச்சர், வணிகவரித்துறை என பல துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர்.
இராமேஸ்வரன் பாம்பன் பாலம் இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தியால் திறக்கப்பட்டது. இன்றும் பாலத்தில் உள்ள அடிக்கல் நாட்டு கல்வெட்டு-திறப்பு விழா கல்வெட்டில் இவர் பெயரை காணலாம்.
அதிமுக பொது செயலாளர்
இவர் அதிமுகவின் பொது செயலாளராக 1978 ல் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர். அப்போது இவரைப் பாராட்டி எம்.ஜி.ஆர் பேசியது குறிப்பிடத்தக்கது.
1963-இடைத்தேர்தல் தோல்விக்கு பின்தான் காமராஜர் “கே” பிளான் கொண்டுவந்தார். மூத்த அமைச்சர்கள் பதவி விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்றார். கலைஞர் அமைச்சரவை,எம்.ஜி.ஆர் அமைச்சரவை இரண்டிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சர் பதவி வகித்தவர் ப.உ.சண்முகம்.1957,1963, 1984 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்.
சிறந்த எழுத்தாளர்
இவர் நகராட்சி தலைவராக இருந்தபோதுதான் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது. பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர். “ஒரு குறள்-ஒரு கதை”,”அண்ணாவுடம் 63 நாட்கள்”, “ரத்தம் செறிந்த அடோகன்”, “அற்புத ஆயுதம் ” உள்ளிட்ட பல நூல்களை எழுதி உள்ளார்.
தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,கலைஞர் மூவருமே இந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது இவர் வீட்டில் தான் தங்குவார்கள்.பேரறிஞர் அண்ணா,கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என நான்கு முதல் அமைச்சர்கள் இவரது சின்னக்கடை தெருவில் உள்ள வீட்டில் தங்கி உள்ளனர்.ஏராளமான திரையுலக கலைஞர்கள் இவர் வீட்டிற்கு வருகை தந்து உள்ளனர்.
திருவண்ணாமலையில் உத்தண்டி பிள்ளை-ராதா இணையருக்கு 15.08.1923ல் பிறந்தவர்.இவர். 11.04.2008ல் இவ்வுலகை விட்டு உயிர் நீர்த்தார்.
சாதனை மனிதர்
ப.உ.ச. பற்றி கலைஞர் கூறுகிறார்… “திமுக வரலாற்று ஏட்டில் திருவண்ணாமலை இடைத்தேர்தலில் ஓர் மகத்தான திருப்பு முனை. அந்தத் தேர்தலில் திருவண்ணாமலையிலேயே தங்கி தேர்தல் பணியாற்றுமாறு அண்ணா அவர்கள் எனக்கு கட்டளை இட்டு இருந்தார். அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம் தனிச்சிறப்பும் தனிப்பெருமையும் கொண்டவர். அவர் இறுதி வரை கொள்கைக் குன்றாக திகழ்ந்த காரணத்தால் என் இதயத்தில் இடம் பெற்ற நண்பர்களில் ஒருவராக திகழ்பவர்”.
கலைஞர் அவர்கள் 1993-ம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் அண்ணா விருது இவருக்கு வழங்கி பெருமைபடுத்தினார்.
இவர் துணைவியார் பெயர் விசாலாட்சி. இவரது மகள் ரமணியை மணந்து கொண்டவர் திருவண்ணாமலையில் இலக்கிய தென்றல் என்று புகழப்படும் கண்ணாச்சி என்கிற ப.கண்ணன் ஆகும். திருவள்ளுவர் திருவிழா,திருக்குறள் பேரவை, முத்தமிழ் மன்றம் இவைகளின் தலைவராக உள்ளார்.
கட்டுரையாளர்:-
புலவர் ந.சண்முகம்.எம்.ஏ,எம்.ஏ.
நந்தினி பதிப்பகம்,திருவண்ணாமலை.
செல்- 9843823777