திருவண்ணாமலையில் பா.ஜ.க நிர்வாகியை பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்றதாக பா.ஜ.க வேட்பாளர் தணிகைவேல் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிருப்தி
திருவண்ணாமலையைச் சேர்ந்த தணிகைவேல் மாநில வர்த்தக அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் வேட்பாளராக நிறுத்தப்பட்டது வரை திருவண்ணாமலை பா.ஜ.கவில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. அவர் தலைமையில் ஒரு கோஷ்டியும்¸ சீனியர்கள் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்பட்டது கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அ.தி.முகவுடன் மோதல்
அதிமுகவினரும் இரட்டை இலைக்கு வாய்ப்பு கிடைக்காத வருத்தத்தில் இருந்தனர். வேட்பு மனு இறுதி நாள் அன்று அதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளரான தணிகைவேலுக்கு எதிராக அதிமுகவின் சீனியர் வழக்கறிஞர் அன்பழகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவிற்கு திருவண்ணாமலை உள்பட 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமையே வேட்பாளருக்கான அங்கீகார கடிதத்தை அன்பழகனுக்கு தந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. குறிப்பிட்ட நேரத்தில் அன்பழகன் அங்கீகார கடிதத்தை கொடுக்காததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது பா.ஜ.க¸ அ.தி.முக இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
டோக்கன் விநியோகம்
அதன் பிறகு பா.ஜ.கவினர் அதிமுகவினரோடு இணைந்து தேர்தல் பிரச்சாரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். கடைசி நேரத்தில் தி.மு.கவில் பணம் விளையாட பா.ஜ.க அடக்கி வாசித்தது தொண்டர்களை சோர்வடைய வைத்தது. தி.மு.க தரப்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 தர பா.ஜ.கவோ பணம் தர முடியாமல் டோக்கனை விநியோகித்தது. பா.ஜ.க ஜெயித்த பிறகு இந்த டோக்கனுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என சொல்லப்பட்டது.
ரூ.28 லட்சம்
தணிகைவேலுவின் ஆதரவாளராக இருந்த அருணை ஆனந்தனிடம்(பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர்) சில பகுதிகளுக்கு டோக்கன் தரும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி தரப்பட்ட திருவண்ணாமலை தாமரை நகர் பகுதிக்கான டோக்கன் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் அவருக்கும்¸ தணிகைவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் தேர்தல் செலவுக்காக தன்னிடம் வாங்கியிருந்த ரூ.28 லட்சத்தை திருப்பி தரும்படியும் தணிகைவேலுவிடம்¸ அருணை ஆனந்தன் கேட்டு வந்தார்.
தாக்குதல்
இது சம்மந்தமாக அவர்களிடையே விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இரவு 2மணி அளவில் தணிகைவேல் உள்பட 4 பேர் செங்கம் ரோடு ரமணா நகர் 3வது தெருவில் உள்ள அருணை ஆனந்தனின் வீட்டுக்கு சென்று கேட்டை தட்டினார்களாம். சத்தத்தை கேட்டு அருணை ஆனந்தன் எழுந்து வந்து பார்த்தார். அப்போது தணிகைவேல் அண்ணனிடம் கொடுத்த பணத்தை கேட்டு அசிங்கப்படுத்துகிறாயா? என சொல்லி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பெட்ரோல் குண்டு
பிறகு அவர்கள் பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டலை அவர் மீது வீசினார்களாம். ஆனால் அந்த பாட்டில் கேட்டின் மீது பட்டு கீழே விழந்ததால் அருணை ஆனந்தன் காயமின்றி தப்பினார். இச்சம்பவம் திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அருணை ஆனந்தன் திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
2 பேர் கைது
போலீசார் தணிகைவேல் உள்பட 4 மீது கொலை முயற்சி மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலை அண்ணாநகரைச் சேர்ந்த பா.ஜ.க மாவட்ட இளைஞரணி செயலாளர் அஜ்வின் என்கிற அஜீத்குமார்(26)¸ ஆனாய் பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தாமரை நகரைச் சேர்ந்த பாபு மற்றும் தணிகைவேலை தேடி வருகின்றனர்.
போனில் மிரட்டல்
இது குறித்து அருணை ஆனந்தன் கூறுகையில் இது போன்ற சம்பவம் தொடரும் என போனிலும் மிரட்டுகின்றனர். இதனால் என் உயிருக்கும்¸ எனது குடும்பத்தார் உயிருக்கும்¸ என்னுடன் இருக்கும் நிர்வாகிகள் உயிருக்கும் அச்சுருத்தல் உள்ளது. எனவே போலீசார் தகுந்த பாதுகாப்பை வழங்கிட வேண்டும் என்றார்.