திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த ராதிகா சரத்குமாரிடம் எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவீர்கள் என கேள்வி கேட்டதற்கு நான் ஜோசியக்காரர் இல்லை என பதிலளித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன்¸ நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும்¸ பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளது. திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் திருவண்ணாமலை தாரா டிஜிட்டல் உரிமையாளர் இரா.அருள் போட்டியிடுகிறார். இந்நிலையில்¸ இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் முடிந்ததும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸ திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்கள்¸ எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர் இரா.அருளுக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறோம். மக்கள் மவுன புரட்சியுடன் இருக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்ற முடிவில் மக்கள் உள்ளனர். அதற்காகத்தான் நாங்களும் உழைக்கிறோம்.
தமிழகத்தில் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடக்கிறது. மக்கள் தெளிவாக உள்ளனர். நல்லவர்கள் யார்?¸ கெட்டவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும். யார் தவறு செய்தார்கள்? மறுபடியும் ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது. மக்களின் முதல் கூட்டணியான எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுக தலைமை இல்லாத ஒரு கட்சி. புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் செயல்பாட்டை அதிமுக மறந்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது பலருக்கும் பிடிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக மீது பெரிய அளவிற்கு பற்றோ பிடிப்போ இல்லை. கலைத்துறையினருக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி ஏதும் செய்யவில்லை¸ திமுகவினர் வீடுகளில் தற்போது வருமான வரி சோதனை என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். திமுகவின் நகைச்சுவை பேச்சாளர்கள்¸பட்டிமன்ற பேச்சாளர்கள் என அனைவருமே பெண்களை தரக்குறைவாக பேசுவது வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
எத்தனை தொகுதிகளில் உங்கள் கூட்டணி வெற்றி பெறும் என நிருபரின் கேள்விக்கு பதிலளித்த ராதிகா¸ நான் ஜோசிக்காரர் இல்லை. நான் இதை நம்புவதும் இல்லை. மக்களிடம் சென்றிருக்கிறோம். அதன் பிறகு அவர்களுடைய தீர்ப்புதான் என்றார்.
பேட்டியின் போது திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இரா.அருள்¸ சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தாய் புக் சென்டர் மூர்த்தி¸ மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.