விக்னேஷ் |
ரெம்டெசிவர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்றதாக கைது செய்யப்பட்ட திருவண்ணாமலை அரசு மருத்துவமனை ஊழியரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அரசு டாக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறது.
அலைமோதும் கூட்டம்
கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மருந்தை வாங்க சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது. தனியார் மருத்துவமனைகள் வெளியிலிருந்து இந்த மருந்தை வாங்கி வரும்படி நிர்பந்திப்பதால் வெளி மாவட்டங்களிலிருந்தும் இங்கு வந்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர்.
போலீசார் அதிரடி சோதனை
இதை பயன்படுத்தி ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக குடிமை பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை தாம்பரம் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் காரில் ரெம்டெசிவர் மருந்தை கடத்தி வந்த தனியார் மருத்துவமனை டாக்டர் முகமது இம்ரான்கான் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 17 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.20ஆயிரத்திற்கு விற்பனை
அவரிடம் விசாரித்ததில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் விக்னேஷ் என்பவரிடம் வாங்கியதாக கூறினார். விக்னேஷ்¸ திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தினை நோயாளிகளுக்கு செலுத்தியாக போலியாக கணக்கு காட்டி மருந்தினை பதுக்கி வைத்துள்ளார். அதன் பிறகு ரூ.4500க்கு விற்கப்பட்ட வேண்டிய இந்த மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.8ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். அவரிடமிருந்து¸ கைதான டாக்டர் முகமது இம்ரான்கான் வாங்கி ரூ.20ஆயிரத்திற்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளார்.
தற்காலிக ஊழியர்
டாக்டர் முகமது இம்ரான்கான் கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த குடிமை பொருள் கடத்தல் பிரிவு போலீசார் விக்னேஷ்சை கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் திருவண்ணாமலை கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக தற்காலிகமாக பணிபுரிந்து வந்தார்.
அரசு டாக்டர் உடந்தையா?
விக்னேஷ்க்கு அவரது நண்பர்கள் 2 பேரும்¸ அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவரும் உதவி இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. இது குறித்து விக்னேஷ்சிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா மருந்தை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தற்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர் மூளையாக செயல்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.