திருவண்ணாமலை கோயிலில் நகைகள் ஏதுமின்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணாமலையார் தீ பந்தத்தின் ஒளியில் ஆனந்த நடனம் ஆடினார்.
பொம்மை பூ தூவல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் சித்திரை மாத வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. தினமும் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அப்போது ஒவ்வொரு சுற்றிலும் மூன்று முறை பாவை என்று அழைக்கப்படுகின்ற பொம்மை அந்தரத்தில் மிதந்து வந்து தன் கையில் வைத்திருக்கும் பூக்கூடையில் இருந்து பல வாசனை மலர்களை அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் மீது தூவும் நிகழ்வு நடந்து வருகிறது.
மற்ற சிவாலயங்களில் கந்தர்வ பொம்மை சுவாமிக்கு பூ போடும் நிலையில் திருவண்ணாமலை கோயிலில் மட்டும் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப்படுகின்ற ஆண்டாள் நாச்சியார் வடிவமான பாவை என்கிற பெண் பொம்மை பூ போடுதல் சிறப்பாகும்.
அபிஷேக ஆராதனை
இன்று 6வது நாளாக பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 5-வது நாள் விழாவில் இரவு ஒளிவு உற்சவம் (மன்மதனை சாமி தேடும் நிகழ்வு) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் ஆனந்த நடனம் ஆடி சம்பந்த விநாயகர் அருகே உள்ள மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் மகிழ மரத்தினை பத்து முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.
அதனை தொடர்ந்து அண்ணாமலையார் 10 முறை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
பூக்களால் அலங்காரம்
பின்பு சாமிக்கு அலங்காரங்கள் கலைக்கப்பட்டு சாமி அணிந்திருந்த நகைகள் எல்லாம் எடுத்துவிட்டு பூக்களால் ஆன அலங்காரம் மட்டுமே சாமிக்கு செய்யப்பட்டது கிரீடம், பாவாடை, மகரகண்டி உள்ளிட்ட அனைத்தும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது பின்பு கோவிலில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு எந்தவித வெளிச்சமும் இன்றி இருட்டில் சுவாமி மூன்றாம் பிரகாரம் வலம் வந்து மகிழ மரத்தின் பின்புறம் ஏலால் தீ பந்தத்தின் (மகா தீபம் ஏற்றுவதற்கு காட்டப்படும் பந்தம்) ஒளியில் அண்ணாமலையார் ஆனந்த நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இசையில் நடனமாடினார்
பின்பு கோவிலில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் போடப்பட்டு அருணகிரி யோகீஸ்வரர் மண்டபத்தில் அருகே ஒடல் வாத்திய இசைக்கருவிகளின் இசையில் நடனமாடி வாண வேடிக்கைகள் உடன் அண்ணாமலையார் காட்சி தந்தார். இதே போன்ற ஒளிவு உற்சவம் 7 வது நாள் திருவிழாவான நாளை நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன்¸ மணியக்காரர் செந்தில்¸ கோவில் சிவாச்சாரியார்கள் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள்¸ இளவரசு பட்டம் பி.டி.ஆர்.கோகுல் குருக்கள் பிச்சகர் மிராசு விஜயகுமார்¸ சிவனடியார் ஆர்.டி.பிரகாஷ் மற்றும் பலர் கொரோனா விதிமுறையை பின்பற்றி பங்கேற்றனர்.
10வது நாள் (26ந் தேதி) தன் மீது அம்பு எய்த மன்மதனை சாமி தகனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.