கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது¸
லட்சக்கணக்கான பக்தர்கள்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்¸ இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.
இதில் குறிப்பாக சித்ரா பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிகிறார்கள்.
இரவு நேர ஊரடங்கு
தமிழ்நாடு அரசு கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு 24.03.2020 முதல் முழு ஊரடங்கு பிறப்பித்து¸ தற்போது¸ தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதனால் பேரிடர் மேலாண்மைத் தடுப்பு சட்டத்தின் கீழ்¸ பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி¸ மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும்¸ இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கும்¸ ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது¸ மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லை
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 26.04.2021 (திங்கட்கிழமை) பகல் 12.16 மணி முதல்¸ 27.04.2021 (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 வரை¸ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சித்ரா பௌர்ணமி கிரிவலம் 14 லோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் வருவதற்கு அனுமதி கிடையாது. எனவே¸ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம் வரவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 13வது மாதமாக கிரிவலம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கிரிவலம் சென்ற பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி வந்தனர். இந்நிலையில் தை மாத பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
குறைந்த அளவு பக்தர்கள்
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டாலும் குறைந்த அளவு பக்தர்கள் கிரிவலம் சென்று வந்தனர். கிரிவலப்பாதையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்படவில்லை. சென்ற மாத பவுர்ணமியன்று அதிக அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் முக கவசம் அணியவில்லை. பக்தர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் தவறி விட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதுபற்றி பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது.
மேலும் தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாதம் முக்கியமான சித்ரா பவுர்ணமியன்று குறைந்த அளவு பக்தர்கள் கூட கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சொல்லப்படுகிறது.