- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமணம் நடத்த அனுமதிக்க கோரி ஊழியர்களுடன் மணவீட்டார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு 24.03.2020 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருவதால் இரவு ஊடரங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்¸ பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய வீதி
திருவண்ணாமலையில் இன்று முழு ஊரடங்கினால் முக்கிய வீதிகள்¸ காய்கறி மார்க்கெட்¸ பூ மார்க்கெட்¸ பலசரக்கு கடை பகுதிகள்¸ மத்திய பேருந்து நிலைய பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றியும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்கமின்றியும் வெறிச்சோடியது. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதே சமயம் பால் விநியோகம்¸ மருத்துவமனைகள்¸ மருத்துவம் சார்ந்தவை¸ சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்கள்¸ விவசாய விளை பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கோயிலுக்குள் அனுமதியில்லை
அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டில் வழிபாட்டு தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கோயிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் திருமணங்களுக்கு ஏற்கனவே பதிவு செய்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் மண்டபங்கள் கிடைக்காததால் திருமணத்தை மாற்ற முடியாமல் தவித்தனர்.
ஊழியர்களிடம் வாக்குவாதம்
இன்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு திருமண வீட்டார் இன்று அதிகாலை முதலே கூடினர். ஆனால் அவர்களை கோயிலுக்குள் பணியாளர்கள் அனுமதிக்கவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கியதால் பதட்டம் அடைந்த மணவீட்டார் கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு அனுமதிக்கவில்லையென்றால் இங்கே உட்கார்ந்து போராட்டம் நடத்துவோம் என மணவீட்டார் கூறியதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து கோயில் இணை ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோயிலுக்கு முன் திருமணம்
இதையடுத்து மணமக்களுடன் 10 பேர் மட்டுமே கோயிலுக்குள் செல்ல இணை ஆணையர் அனுமதி அளித்தார். அதன்பிறகு 12 ஜோடிகளுக்கு கோயிலுக்குள் திருமணம் நடைபெற்றது. ஒரு திருமணம் முடிந்த பிறகே அடுத்த திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் முகூர்த்த நேரம் தவறக் கூடாது என்பதற்காக சில ஜோடிகளுக்கு கோயிலுக்கு முன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகரம் வெறிச்சோடி கிடக்க மணவீட்டார் விடாப்பிடியால் அண்ணாமலையார் கோயில் பரபரப்பாக காணப்பட்டது.