திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மற்றும் வேடியப்பன் மலையில் ஏற்பட்ட பயங்கர தீ ரோகன் போக் இந்தியா தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் அணைக்கப்பட்டது.
2 லட்சம் மரங்கள்
இரும்பு தாது கொண்டது கவுத்தி மற்றும் வேடியப்பன் மலையாகும். இங்கு 325 ஹெக்டேர் பரப்பளவில் இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க ஜிண்டால் நிறுவனம் முயன்ற போது மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டத்தின் காரணமாக இது தடுத்து நிறுத்தப்பட்டது. மலையில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதாலும்¸ தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் இரும்பு துகள்களை சுவாசிப்பதால் ஏற்படும் நுரையிரல் கோளாறு¸ விவசாயம் பாதிப்பு¸ நீர்நிலைகள் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அரிய வகை மரங்கள்
இப்படி தனியார் நிறுவனத்திடமிருந்து காப்பாற்றப்பட்ட கவுத்தி – வேடியப்பன் மலை அடிக்கடி தீப்பற்றி கொள்வது இயற்கை ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென ஏற்பட்ட தீயில் 3 ஏக்கர் பரப்பளவில் இருந்த அரிய வகை மரங்கள்¸ மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. வனத்துறையினரும்¸ கிராம மக்களும் போராடி தீயை அணைத்தனர்.
25 பேர் கொண்ட குழு
இதே போன்று சில தினங்களுக்கு முன்பும் கவுத்தி – வேடியப்பன் மலை தீப்பிடித்து எரிந்தது. தீ படிப்படியாக பரவியது. இதைப்பார்த்த வேடியப்பனூர் கிராமத்தில் இயங்கி வரும் ரேகன்போக் இந்தியா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மதன்மோகன் தலைமையில் அருணாசலா பள்ளியின் முன்னாள் மாணவர்கள்¸ ரேகன்போக் இந்தியா பணியாளர்கள்¸ சில தன்னார்வலர்கள் என ஏறக்குறைய 25 பேர் கொண்ட குழு மலை மீது ஏறி வனத்துறை உதவியுடன் தீயை அணைத்தது. இதில் பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. ஆனாலும் இதை பொருட்படுத்தாமல் கடுமையாக போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீயில் பல மரங்கள்¸ செடிகள்¸ கொடிகள் தீயில் கருகி சாம்பலானது.
மதன்மோகன் |
இது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகி மதன்மோகன் நம்மிடம் கூறியதாவது¸
விழிப்புணர்வு கூட்டங்கள்
4ந் தேதி பிடித்த தீயை வனத்துறையினருடன் இணைந்து 6 மணி நேரம் போராடி அணைத்தோம். இந்நிலையில் 6ந் தேதி மாலை 4 மணி அளவில் கவுத்தி வேடியப்பன் கோவிலுக்கு மேற்புறம் தீப்பிடிக்க தொடங்கியது. 3¸4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கோடாய் எரிந்து பரவிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். பழக்கமில்லா மலைப்பகுதி¸ கடினமான கொக்கி முட்செடிகள்¸ சிறு கற்கள்¸ பாறைகள் மற்றும் ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்த மஞ்சம்புல் இவைகளையெல்லாம் கடந்து மலையேறினோம். இடது பக்க மலையில் உள்ள தீயை அணைக்கும் போது நடுஇரவு 12.30 மணி. சோர்வடையாமல் அடுத்த மலைக்கு சென்று தீயை அணைத்து முடிக்கும் போது இரவு 2 மணி. வனத்துறை காவலர் பாலாஜி எங்களுக்கு வழிகாட்டியது பயனுள்ளதாக இருந்தது.
3ந் தேதி கலர் கொட்டாய் கிராமம் அருகே உள்ள ஒரு சிறிய மலையிலும் ஏற்பட்ட தீயை அணைத்தோம். இனி இது தொடராமல் இருக்க மலையடிவார கிராமங்களில் வனத்துறை¸ வருவாய்த்துறை மற்றும் காவல் துறை உதவியுடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரும் சேதம் தவிர்ப்பு
கவுத்தி – வேடியப்பன் மலையில் 2 தினங்களாக ஏற்பட்ட பயங்கர தீயை 16 மணி நேரம் போராடி அணைத்துள்ளனர். ரேகன்போக் இந்தியா தொண்டு நிறுவனம் துணிந்து இறங்கி உடனடியாக மலைக்கு சென்று தீயை அணைத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்காக ரேகன்போக் இந்தியா தொண்டு நிறுவனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.