Homeஆன்மீகம்குழந்தை வரம் தரும் பட்டி பாலூர் ஐயப்பன் கோயில்

குழந்தை வரம் தரும் பட்டி பாலூர் ஐயப்பன் கோயில்

குழந்தை வரம் தரும் பட்டி பாலூர் ஐயப்பன் கோயில்
  • குழந்தை வரம் தரும் சின்ன சபரிமலை என்றழைக்கப்படும் பட்டி பாலூர் ஐயப்பன் கோயிலில் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு ஐயப்பனின் பெயர்களை சூட்டி மகிழ்கின்றனர். 

தீர்த்தத்தில் நீராடி ஈரத்துணியுடன் ஐயப்பன் வணங்கி வேப்பமரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிட்டும் ஜயப்பன் கோயிலின் சிறப்புகளை இப்போது பார்க்கலாம். 

வேப்பமரத்தில் தொட்டில்

- Advertisement -

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஒடுகத்தூர் சாலையிலுள்ள சாஸ்தாபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஐயப்பன் கோவில் உள்ளது. இத்தலத்தில் கிழக்கு பார்த்து சிரித்த முகத்துடன் உள்ள ஐயப்பனை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மண்டியிட்டு மனதார வேண்டி வணங்கி கோவிலில் இருக்கும் சாஸ்தா தீர்த்தத்தில் நீராடி ஈரத்துணியுடன் ஐயப்பன் வணங்கி தலவிருட்சமான வேப்பமரத்தில் தொட்டில் கட்டினால் நிச்சயம் அடுத்தவருடமே குழந்தை பாக்கியம் தருவார் தர்ம சாஸ்தா என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் தம்பதிகள் மழலைச்செல்வத்துடன் வந்து எடைக்கு எடை நாணயம் அல்லது பழவகைகளை கொண்டு காணிக்கையாக துலாபாரத்தில் செலுத்துகின்றனர். 

பெயர் சூட்டுதல்

ஆண் குழந்தையாக இருந்தால் சாஸ்தா¸ சபரி¸ வீரமணி¸ ஹரிஹரசுதன்¸ மணிகண்டன்¸ பூதநாதன்¸ பூலோகநாதன்¸ கருணாசாகர்¸ கலியுக வரதன்¸ ஹரிஹரன் என்ற ஐயப்பனின் பெயர்களை சூட்டுகின்றனர் பெண் குழந்தைகளாக இருந்தால் அங்கையர்கன்னி¸ அஞ்சனநாயகி¸ அபிராமி¸ அம்பாயிரவள்ளி¸ அருமருந்தம்மை¸ ஏலவார்குழலி என்றும் பெயர்வைத்து மகிழ்கின்றனர். சபரிமலையிலுள்ள ஐயப்பனை காண செல்லமுடியாத வயதானவர்கள் ஆர்.பட்டி பாலூரிலுள்ள ஐயப்பனை தரிசிக்கலாம். பக்தர்கள் இடுமுடி சுமந்து 18 படிகளை கடந்து தர்மசாஸ்தாவிற்கு நெய்அபிஷேகம் செய்து தரிசிக்கலாம். 

குழந்தை வரம் தரும் பட்டி பாலூர் ஐயப்பன் கோயில்

அனைத்து வயது பெண்கள்

மேலும் இருமுடி கட்ட வசதியில்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து கோவில் நிர்வாகம் சார்பில் இருமுடி கட்டி நெய் அபிஷேகம் செய்து கொள்ளலாம். இதற்காக எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க முடியாத அனைத்து வயது பெண்களும் இங்கு பொதுவழியில் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இருமுடி கட்டி வராத பக்தர்களும் பொதுமக்களும் பொதுவழியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

3 வேளை அன்னதானம்

இத்தலத்தில் உள்ள ஐயப்பனை தரிசிக்க வரும் சுற்றுவட்டார பகுதி மக்களின்றி வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானமும் தங்க இடவசதியும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரும் பணஉதவி மற்றும் பொருளுதவி இவைகள் அனைத்தும் கோவிலுக்கு வந்து தரிசிக்கும் பக்தர்கள் பசியார அன்னதானத்திற்கே செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புலி மீது ஐயப்பன்

கோவிலுக்குள் நுழைந்ததும் நம்மை வரவேற்கும் விநாயகர் ஆஞ்சநேயர் வில்லுடன் புலிமீது புதை சிற்பமாக அமைந்திருக்கும் ஐயனை தரிசித்து அதனருகே பம்பா தீரத்தில் பாண்டிய மன்னனும் பந்தலத்து அரசனுமான ராஜசேகரன் குழந்தை இல்லாத தனக்கு பகவானே குழந்தையை கொடுத்ததும் சுதை சிற்ப காட்சிகளும் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் சூட்டினார் என்பதை தத்ரூபமாக வடிவமைத்துள்ளது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதனருகே சாஸ்தா தீர்த்தத்துக்கு பின்புறம் நாகசிலையும்¸ மஞ்சமாதாவும் உள்ளனர்.

ஐயப்பனை தரிசிக்க 18 படி ஏறுமுன் வலதுபுறம் பெரிய கருப்புசாமி¸ இடதுபுறம் சிறிய கருப்பு சாமியுடன் காத்தாயிம் இருந்து ஆசிவழங்கி அனுப்பிவைக்கின்றனர். 18 படியேறும் சபரிமலையில் உள்ளதுபோல் பிரமாண்ட அக்னி குண்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தை வரம் தரும் பட்டி பாலூர் ஐயப்பன் கோயில்

சின்ன சபரிமலை

சாமியே சரணம், ஐயப்பா சரணம் என்று கோஷமிட்டு சபரிமலை செல்லமுடியாத பக்தர்கள் ஆர்.பட்டி பாலூரிலுள்ள ஐயப்பனை தரிசிக்கலாம். 18 படிமேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க அனைத்து துன்பங்களும் பயந்து ஓடும். வீரமணி என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் சபரிநாதனை வணங்கி வாழ்வில் நலமும் வளமும் பெறுவோம்.

தொடர்புக்கு

இரா.ராமநாதபிரசாத் குருசாமிகள்

தர்மசாஸ்தா திருக்கோயில்

சாஸ்தாபுரம்

ஆர்.பட்டி பாலூர்

மாதனூர் ஒடுகத்தூர் சாலை

ஆம்பூர் தாலுக்கா

திருப்பத்தூர் மாவட்டம்

9952241636¸ 6381519370

ப.பரசுராமன்

- Advertisement -
email
contact@agnimurasu.com -ல் செய்தி, கட்டுரைகளை அனுப்பலாம்.

Must Read

error: Content is protected !!