Homeஆன்மீகம்சாத்தனூர் அணை கட்ட துணை புரிந்த வேடியப்பன்

சாத்தனூர் அணை கட்ட துணை புரிந்த வேடியப்பன்

சாத்தனூர் அணை கட்ட துணை புரிந்த வேடியப்பன்

சாத்தனூர் அணை கட்டுவற்கு துணையாக இருந்த பெரியமலை வேடியப்பன், சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். 

தீராத நோய் தீரும் 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அடுத்துள்ள புளியங்குளம் கிராமம் பெரியமலை அடிவாரத்தில் 7ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நரசிம்ம பல்லவ மன்னனால் பூஜித்து வழிபட்ட சுயம்பு வேடியப்பன் உள்ளது. இந்த வேடியப்பனை மனதார வேண்டி இங்கு ஞாயிற்றுக்கிழமையில் தரும் அபிஷேக தீர்த்ததை உட்கொண்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

மேலும் விவசாயம் செழிக்கவும்¸ இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கும் கிராம மக்கள்¸ நோய் தீர ஆடு¸ மாடுகளுக்கும் கொடுக்கின்றனர். பிராத்தனைகள் நிறைவேறியதும் , சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். இங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும்,மனநலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொடுப்பதற்காக தீர்த்தம் வாங்கி செல்கின்றனர். தீர்த்தம் கொண்டு செல்பவர்கள் கோயிலில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியே திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும் என்பது பலகாலமாக கிராம மக்கள் வழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நரசிம்ம பல்லவன்

பல்லவ மன்னன் நரசிம்மன், படைகளுடன் பெரியமலை வழியே சென்றபோது வேடியப்பன் கோவில் அருகே குதிரை பின்னுக்கு வந்து பிளிரியது. அப்போது ஆடுமேய்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் மன்னரிடம்¸ இங்கு சுயம்புவாக வேடியப்பன் கோவில் உள்ளது என்று தெரிவித்தார். பின்னர் நரசிம்ம மன்னன் குதிரையிலிருந்து கீழிறங்கி வணங்கிச் சென்றார் என்பது இன்றளவும் செவிவழி செய்தியாக உள்ளது.

காமராஜர் 

காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது  சென்னகேசவ மலைக்கும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்ட 1953ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அணை கட்ட சேலத்திலிருந்து கல்தூக்கும் தொழிலாளர்களை வரவழைத்து பல இடங்களில் தங்கவைத்து கல்தூக்கும் வேலையில் ஈடுபட்டனர். அப்போது பெரியமலை வேடியப்பனை வணங்கி கல் உடைப்பதை வழக்காக கொண்டிருந்தனர். பின்னர் 119 அடி உயர அணை 1958ல் வெகு விரைவில் கட்டிமுடிக்கப்பட்டது. சேலத்திலிருந்து வந்தவர்கள் ஊருக்கு செல்லும் முன் வேடியப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை வரம்

குழந்தை இல்லாத தம்பதிகள் வேடியப்பனிடம் குழந்தைபாக்கியம் வேண்டிக்கொண்டு தொட்டில் கட்டுகின்றனர்.பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் சிறப்பு அபிஷேகம் செய்தும்,  பொங்கல்  வைத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும், கிடாவெட்டியும் விருந்து வைக்கின்றனர்.

சாத்தான் பயம்

அந்த காலத்தில்  கிராம மக்களுக்கு சாத்தான் இடையூறு செய்ததாகவும், இதனால் மக்கள் பயத்தில் கிராமத்தை விட்டே வெளியேறினர் என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் பெரியமலை வேடியப்பனை சுற்றுபுற கிராம மக்கள் வணங்கி வந்ததால் சாத்தான் பயம் விலகியதாகவும் கூறுகின்றனர் ஊர் மக்கள். இப்போதும் ஊரை சுற்றி எல்லையில் எட்டு திக்கிலும் வேடியப்பன் வேல்களை வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாத்தான் ஊர் என்ற பெயர் மாறி இன்று சாத்துனூர் என அழைக்கப்படுகிறது. மேலும் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களில் குழந்தைகளின் பெயர் வேடியப்பன்¸ பெரியமலையான் என்ற பெயர்களே அதிக அளவில் உள்ளது குறிப்பித்தக்கது.

காவல் தெய்வம்

நீண்ட தூரம் பயணம் புறப்படுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் வந்து வேடியப்பனிடம் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பயணம் செய்கின்றனர்.  அப்படி செல்பவர்கள் அந்த வேடியப்பனே தங்களுடன்  பாதுகாப்பாக வருவதாக நம்புகின்றனர். இத்தலத்தில் உள்ள வேடியப்பன்,சாத்தனூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. 

வேல் விலங்கு

மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இயற்கையாகவே பயம் உணர்வு உள்ளவர்கள் வேல் விலங்கு என்னும் இரும்பு சூலம் இங்குள்ளது. இதற்கு பூஜை செய்தால் தீய சக்திகள் வலகி பய உணர்வு நீங்குவதாக நம்பிக்கை. இந்த வழிபாட்டுக்கு கட்டு வார்த்தனம் என்று பெயர். சரிவர படிக்காத மாணவர்களின் பெற்றோர் எலுமிச்சைபழம் கொடுத்து மந்திரித்து எடுத்துச் செல்கின்றார். இதை வீட்டில் வைத்து வழிப்பட்டால் கல்வியில் சிறந்து விளங்குவதாக நம்பிக்கை. மேலும் இங்கு கண் திருஷ்டிகள் எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி கழிக்கப்படுகிறது.

சாத்தனூர் அணை கட்ட துணை புரிந்த வேடியப்பன்

சத்திய வாக்கு

இங்கு மதுவுக்கு அடிமையானவர்களிடம்  கயிறு கட்டி சத்திய வாக்கு வாங்குகின்றனர் அப்படி சத்தியம் செய்தவர்கள் மீண்டும் மதுவை தொட்டால் இறந்து விடுவதாக நம்புகின்றனர்.இத்திருத்தலம் திருவண்ணாமலையில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. சாத்தனூரில் இறங்கி 4 கி.மீ. தூரத்தில் பெரியமலை வேடியப்பன் கோவில் உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின்  திருப்பணி நடைபெற்று வருகிறது. இத்திருப்பணியில் நீங்களும் ஒருவராக இருந்துபொருளுதவியோ பணஉதவியோ தந்து பெரியமலை வேடியப்பனின் அருளை பெறலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்பு

கோயில் நிர்வாக திருப்பணி குழுத் தலைவர் -கோ.ஜெயவேல் 9486284306

பூசாரிகள்-மாதவன்¸ திரிசங்கு 9940871674  

– ப பரசுராமன்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!