முழு ஊரடங்கு நேரத்தில் சுற்றித் திரிந்த இளைஞர்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரித்து அனுப்பினார்.
கொரோனா பராமரிப்பு மையம்
திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் இன்று (11.05.2021) கொரோனா முழு ஊரடங்கினை முன்னிட்டு தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைகள்¸ கடைகள்¸ உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படுவதும்¸ புதியதாக அமைக்கப்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது¸ திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல்¸ நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி¸ அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த¸ 10.05.2021 காலை 4மணி முதல் 24..05.2021 காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கண்காணிப்பு
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம்¸ மருத்துவத் துறை¸ காவல் துறை¸ வருவாய்த் துறை¸ உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரசு உயர் அலுவலர்கள்¸ மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ சுகாதாரப் பணியாளர்கள்¸ தூய்மைப் பணியாளர்கள்¸ காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஓட்டல்களில் திடீர் சோதனை
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று (11.05.2021) திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானம்¸ மத்திய பேருந்து நிலையம்¸ திருக்கோவிலூர் சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள மைதானம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தைகளை பார்வையிட்டார். மேலும்¸ கொசமடத் தெருவில் கடைகள்¸ உணவகங்களில் அரசின் வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என சோதனை நடத்தினார்.
சுற்றித் திரிந்த இளைஞர்கள்
இந்த ஆய்வின் போது காந்தி சிலை சந்திப்பு¸ கிரிவலப் பாதை¸ காஞ்சி சாலை அபயமண்டபம் ஆகிய இடங்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த இளைஞர்களை அழைத்து எச்சரித்ததோடு மட்டுமன்றி தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தயாராகும் யாத்ரி நிவாஸ்
மேலும்¸ திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மற்றும் செங்கம் சாலையில் உள்ள யாத்ரி நிவாஸ் ஆகிய இடங்களில் தலா 100 படுக்கைகள் வீதம்¸ மொத்தம் 200 படுக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் வேங்கிக்கால் துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று 732 பேர் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று 732 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.