திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமம் கொரோனா தடுப்பு பணிகளில் நேசக்கரம் நீட்டி இருப்பது அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
கவச உடைகள்
திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமம்¸ கொரோனா களப்பணியாளர்களுக்கு கவச உடைகளை வழங்கியுள்ள நிலையில் ரமணாஸ்ரமம்¸ விசிறி சாமியார் ஆசிரமங்களும் உதவிகளை செய்திட முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அன்னதானம்¸ தியானம்
ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில்; புகழ் பெற்ற ரமணாஸ்ரமம்¸ சேஷாத்திரி ஆசிரமம்¸ விசிறி சாமியார் ஆசிரமங்கள் அமைந்துள்ளன. இது தவிர கிரிவலப்பாதையிலும் பல்வேறு ஆசிரமங்களும் உள்ளன. அன்னதானம்¸ தியானம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆசிரமங்கள் இயங்கி வருகின்றன. வெளிநாட்டு பக்தர்களை அதிகம் கொண்டிருப்பது ரமணாஸ்ரமம்¸ சேஷாத்திரி ஆசிரமம்¸ விசிறி சாமியார் ஆசிரமம் ஆகியவைகள் ஆகும்.
கிரிவலப்பாதை தூய்மை
பெரும்பாலும் ஆசிரமங்கள் தினமும் அன்னதானத்தை வழங்கி வருகின்றன. இதைத் தவிர ரமணாசிரமம்¸ விசிறி சாமியார் ஆசிரமம் ஆகியவற்றின் சார்பில் நோயாளிகளுக்கு மருந்து¸ மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வெளிநாட்டவரால் நடத்தப்பட்டு வரும் சாந்திமலை நிறுவனம் கிரிவலப்பாதை தூய்மை பணிகளையும்¸ கழிவறை பராமரிப்பு பணிகளையும் செய்து வருகிறது.
தங்க கை சுவாமிகள்
சித்து வேலைகளில் சிறந்தவரான சேஷாத்திரி சுவாமிகளிடம் தீயவர்கள் நெருங்க முடியாது. திருவண்ணாமலை நகரில் கடைகளில் விற்பதை எடுத்து கீழே எரிந்து விட்டு செல்வார். இதற்கு கடை முதலாளிகள் கோபப்படாமல் மகிழ்ச்சி கொள்வர். காரணம் சேஷாத்திரி சுவாமிகள் கை வைத்தால் அன்றைய தினம் வியாபாரம் களை கட்டும் என்பதே. இதனால் தங்க கை சுவாமிகள் என சேஷாத்திரி சுவாமிகளை பொது மக்கள் அழைத்தனர். 1929ம் ஆண்டு மகாசமாதி அடைந்தார். ரமணாஸ்ரமம் அருகில் அவர் சமாதி அமைய பெற்று ஆசிரமம் உள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி
இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆசிரமத்தை நிர்வாகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனை சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்றுத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு உதவ சேஷாத்திரி ஆசிரமம் முன் வந்திருக்கின்றது.
முழுகவச உடைகள்
ஆசிரமத்தின் நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆசிரமத்தின் மூலம் PPE எனப்படும் முழுகவச உடைகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகராட்சி தகன எரிவாயு கூடத்திற்குத் தேவையான முழுகவச உடைகள் மற்றும் முகக்கவசங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன்¸ ஊழியர்களிடம் ஒப்படைத்தார். அடுத்த கட்டமாக இவை முன்களப்பணியாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆசிரம மேலாளர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
ரமணாஸ்ரமம்
சேஷாத்திரி ஆசிரமத்தின் இச்சேவையை அனைவரும் பாராட்டியுள்ளனர். கொரோனா பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்ற நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை செய்து வரும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் கொரோனா என்னும் கொடிய நோயை ஒழிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு முன்களப்பணியாளர்களுக்கு சேஷாத்திரி ஆசிரமம் உதவி செய்தது போல் ரமணாஸ்ரமம்¸ விசிறி சாமியார் ஆசிரமங்களும் உதவிட முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.