திருவண்ணாமலையில் வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி ஊரடங்கு நேரத்தில் வலம் வந்த பெண்ணுக்கு கலெக்டர் ரூ.500 அபராதம் விதித்தார்.
தீவிர களப் பணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மருத்துவத் துறை¸ வருவாய்த் துறை¸ காவல் துறை¸ உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள்¸ மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ மருத்துவப் பணியாளர்கள்¸ தூய்மை பணியாளர்கள்¸ காவலர்கள் ஆகியோர் இரவு¸ பகல் பாராமல் 24 மணி நேரமும் தீவிர களப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா பராமரிப்பு மையம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்தகாக அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள சுற்றுலா மாளிகை 24 மணி நேரம் செயல்படும் கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டு இன்று 19.05.2021 முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மையத்தில்¸ மருத்துவர்கள்¸ செவிலியர்கள்¸ சுகாதாரப் பணியாளர்களுடன்¸ 100 படுக்கைகள்¸ உணவு¸ குடிநீர்¸ உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. அரவிந்த்¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி¸ சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜிதா¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ அரசு அலுவலர்கள்¸ மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
மருந்து கிடங்கு
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை பேகோபுரம் பிரதான தெரு¸ சட்டநாயக்கன் தெரு¸ காஞ்சி சாலை ஆகிய இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாமில் ஆய்வு மேற்கொண்டார். மேலும்¸ சட்டநாயகன் தெருவில் மருந்துகள் வைக்கப்பட்டுள்ள மொத்த விற்பனை சேமிப்பு கிடங்கினையும் ஆய்வு செய்தார்.
ரூ.500 அபராதம்
திருவண்ணாமலை சின்னக் கடை தெரு¸ வேங்கிக்கால் இந்திரா நகர்¸ அறிவியல் பூங்கா அருகில் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் சென்ற போது கொரோனா ஊரடங்கு கடைபிடிக்காமல் இரு சக்கர வாகனங்களில் காரணமின்றி சுற்றிக் கொண்டிருந்தவர்கள்¸ ஊரடங்கு நேரம் முடிந்தும் வாகனத்தில் தக்காளி வியாபரம் செய்தவர்¸ தேநீர் கடை நடத்தியவர் ஆகியோருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்க உத்திரவிட்டார்.
போலீஸ் ஸ்டிக்கர்
சின்னகடைத் தெருவில் கடை மூடப்பட்ட நிலையில் வியாபாரம் செய்வதற்காக வெளியில் உட்கார்ந்திருந்த பெண்களை விசாரித்து அவர்களை அங்கிருந்து செல்லும்படி அறிவுருத்தினார். அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஸ்கூட்டரை ஓட்டி வந்த பெண்ணை நிறுத்தி விசாரித்தார். அவரிடம் யார் போலீஸ் என விசாரித்தார். அதற்கு அந்த பெண் விழித்தார். அப்போது அவருடன் வேறொரு வண்டியில் வந்த நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் அந்த வண்டி எந்த போலீஸ்காரருக்கு சொந்தமானது என்பது பற்றி கூறினார்.
ஆனாலும் ஊரடங்கு நேரத்தில் சுற்றித் திரிந்ததற்காக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஸ்கூட்டரை ஓட்டி வந்த பெண்ணுக்கு ரூ.500 அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.