திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு 24.03.2020 முதல் முழு ஊரடங்கு பிறப்பித்து¸ தற்போது¸ தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதனால் பேரிடர் மேலாண்மைத் தடுப்பு சட்டத்தின் கீழ்¸ கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி¸ பேரூராட்சி¸ ஊராட்சி பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள்¸ பழங்கள் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் விற்பனை செய்தவற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டையில் வாகன எண்¸ நேரம்¸ தெரு உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. நகராட்சிகள்¸ பேரூராட்சிகள்¸ உள்ளாட்சித் துறை¸ தோட்டக்கலைத் துறை¸ வேளாண் விற்பனை ஆகிய துறைகள் இணைந்து நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளித்து வருகின்றன.
திருவண்ணாமலை நகரில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி¸ பழங்களை விற்பனை செய்ய விரும்பும் வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் அனுமதி சீட்டு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட 213 வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பமில்லாத வியாபாரிகள் இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களிடம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் தடுப்பூசியை விருப்பப்பட்டவர்கள் போட்டுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ள நிலையில் அதை கட்டாயமாக்க கூடாது¸ சென்ற வருடம் எப்படி அனுமதி அளிக்கப்பட்டதோ அப்படியே இந்த வருடமும் அனுமதி அளித்திட வேண்டும் என்றனர்.
காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் உணவு பொருட்களை வாங்கும் போது அந்த கவரை தூக்கி வீசி விடுகிறோம். காய்கறிகளை உப்பு¸ மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவிதான் பயன்படுத்துகிறோம். எனவே காய்கறி வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்படுவது அவர்களுக்கும் பாதுகாப்பு¸ எங்களுக்கும் பாதுகாப்பு என்றனர்.
திருவண்ணாமலையை வலம் வந்த ட்ரோன் கேமிரா
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின் படி 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 385 நபர்களுக்கும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 17 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 கடைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு¸ சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 501 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 499 மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்ட எல்லையில் தடுப்பான்கள் அமைத்து 24 மணிநேரமும் காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டுகிறது. நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இருசக்கர வாகன ரோந்து மூலம் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை நகரில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டத்தை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்தனர். பெரியார் சிலை சந்திப்பு¸ ரவுண்டனா சந்திப்பு¸ அறிவொளி பூங்கா சந்திப்பு¸ ஈசான்யம் சந்திப்பு¸ காந்திசிலை சந்திப்பு உள்பட பல இடங்களில் பறக்கும் கேமரா சுற்றி வந்தது. அப்போது பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்ததை காண முடிந்தது.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் ரோடு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடைபயிற்சி சென்றவர்களை போலீசார் மடக்கி நிற்க வைத்தனர். பிறகு அவர்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
44 வயது வரை உள்ள ஆசிரியர்களுக்கு தடுப்பூசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 44 வயது வரை உள்ள பள்ளி ஆசிரியர்கள்¸ கல்லூரி பேராசியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு¸ அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள்¸ கல்லூரிகள்¸ பொறியியல் கல்லூரி¸ பாலிடெக்னிக் கல்லூரி¸ ஐடிஐ¸ உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்¸ பேராசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும்¸ தற்போது மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரிந்து வரும் கல்வி நிறுவன வளாகத்திலேயே சுகாதாரத் துறையினர் மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 04175-1077¸ 04175-233344¸ 04175-233345 ஆகிய எண்களிலும்¸ 8870700800 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
சற்றே குறைந்த கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக 1000த்தை கடந்தது. இந்நிலையில் இந்த பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழுந்துள்ளனர். இன்று வரை மொத்தம் 37ஆயிரத்து 578 பேர் பாதிப்படைந்ததில் 30 ஆயிரத்து 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7ஆயிரத்து 163 பேர் சிகிச்சையில் உள்ளனர்.