திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்காக வெளிநாட்டவர் நடத்தும் சாந்திமலை நிறுவனம் 40 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவியுள்ளது. அதே சமயம் புகழ் பெற்ற ரமணாசிரமம்¸ விசிறி சாமியார் ஆசிரமங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் உள்ளன.
சேஷாத்திரி ஆசிரமம்
அதே சமயம் சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமம் கொரோனா தொற்றுத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு முழுகவச உடைகள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி பொதுமக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளது.
ஆசிரமத்தின் நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் நகராட்சி தகன எரிவாயு கூட ஊழியர்களிடம் இவற்றை ஒப்படைத்தார். அடுத்த கட்டமாகவும் உதவி செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
டி.வி.எஸ். நிறுவனமும் 17 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கியுள்ளது.
சாந்திமலை நிறுவனம்
இதே போல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வெளிநாட்டவரால் நடத்தப்பட்டு வரும் சாந்திமலை நிறுவனமும் கொரோனா தடுப்பு பணிக்கு உதவியை செய்துள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாகி டாக்டர் வர்னர் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrator)¸ 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 சிறிய அளவிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (Portable Oxygen Concentrator) மற்றும் 6000 N95 முககவசங்கள், கொரோனா ஆக்ஸிஜன் உபகரணங்கள் ஆகியவற்றை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார்.
ஏழைகளுக்கு உதவி
சாந்திமலை நிறுவனம்¸ கிரிவலப்பாதை தூய்மை பணி¸ கழிவறை பராமரிப்பு பணி ஆகியவற்றோடு ஏழைகளுக்கு உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உதவி செய்யாதது ஏன்?
திருவண்ணாமலையில் ரமணாசிரமம்¸ சேஷாத்திரி¸ விசிறி சாமியார் ஆகியவை புகழ் பெற்றவை ஆகும். ரமணாசிரமத்திற்கும்¸ விசிறி சாமியார் ஆசிரமத்திற்கும் வெளிநாட்டு பக்தர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் உயிரை காவு வாங்கும் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிக்கு ரமணாசிரமமும்¸ விசிறி சாமியார் ஆசிரமமும் எந்தவித உதவியும் செய்யாமல் இருந்து வருவது ஏன்? என்ற கேள்வி எழந்திருக்கிறது.