ஊரடங்கு நேரத்தில் தர்பார் படத்தை திரையிட்ட திருவண்ணாமலை அன்பு தியேட்டருக்கு கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் பணிகளில் சுகாதாரத் துறை¸ வருவாய்த் துறை¸ காவல் துறை¸ உள்ளாட்சித் துறை¸ உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள்¸ மருத்துவர்கள்¸ சுகாதாரப் பணியாளர்கள்¸ தூய்மை பணியாளர்கள் பல்வேறு முன்களப் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை¸ அரசு மருத்துவமனைகள்¸ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கலெக்டர் எச்சரிக்கை
இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி இன்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்த ஆய்வினை திருவண்ணாமலை பகுதிகளில் மேற்கொண்டார். அப்போது¸ தேனிமலை¸ பார்வதி நகர் மற்றும் போளுர் சாலையில் கும்பலாக பேசிக் கொண்டிருந்தவர்களிடம் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்க அறிவுறுத்தி¸ வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.
தர்பார் படம்
தேரடி வீதி காந்தி சிலை அருகில் நடைபெற்று வரும் சிறப்பு காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது அருகில் இருந்த அன்பு திரையரங்கம் திறக்கப்பட்டு அங்கிருந்து படம் ஓடும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த தியேட்டருக்கு ஆட்சியர் நுழைந்து பார்த்த போது திரையில் அதிக சத்தத்துடன் ரஜினி நடித்த தர்பார் படம் ஓடிக் கொண்டிருந்தது.
கலெக்டர் உத்தரவு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உடனடியாக அந்த தியேட்டரை மூடி சீல் வைக்கவும்¸ ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரத்தை வசூலித்தனர்.
கலெக்டரிடம் சிபாரிசு
இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த தியேட்டர் உரிமையாளரும்¸ திமுக பிரமுகருமான பாலாஜி தியேட்டருக்கு சீல் வைக்காதிருக்க பவரில் உள்ள திமுக முக்கிய பிரமுகர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு சீல் வைக்காதிருக்க கலெக்டரிடம் பேசும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் இதை கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள் தியேட்டருக்கு சீல் வைத்து விட்டு சென்றனர்.
பொதுமக்கள் வரவேற்பு
இது பற்றி தியேட்டர் தரப்பில் விசாரித்ததில் பராமரிப்பு பணிக்காக தியேட்டரை திறந்ததாகவும்¸ இயக்காமல் இருந்தால் புரெஜெக்டர் பழுதாகி விடும் என்பதால் படத்தை திரையிட்டதாகவும் தெரிவித்தனர். அதற்காக தியேட்டரை திறந்து வைத்து அதிக சத்தத்துடன் படத்தை ஓட்டுவதா? என கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள் கலெக்டரின் அதிரடி நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.