திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடராஜருக்கு நடந்த நட்சத்திர அபிஷேகத்தின் போது கொரோனா ஒழிய சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜப்பெருமானுக்கு சிவகாமிசுந்தரி அம்பாளுக்கும் நட்சத்திர அபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.
சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றான நடராஜப்பெருமானுக்கு நட்சத்திர மற்றும் திதி அபிஷேகங்கள் உலகிலுள்ள எல்லா சிவாலயங்களிலும் காலை மாலை என இரு வேலைகளிலும் நடைபெறுவது வழக்கம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் நடராஜ பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு நடராஜப்பெருமானுக்கு வருடத்திற்கு 6 முறை அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் 3 நட்சத்திர அபிஷேகமும்¸ 3 திதி அபிஷேகமும் நடக்கும்.
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்திலும்¸ ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திலும்¸ மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திலும் நடக்கும் அபிஷேகங்கள் நட்சத்திர அபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.
அதே போல் ஆவணி¸ புரட்டாசி¸ மாசி மாதங்களில் சதுர்தசி திதியில் நடத்தப்படும் அபிஷேகம், திதி அபிஷேகம் எனப்படும். இந்த அபிஷேகங்கள் மாலை வேளைகளில் நடைபெறும்.
அதன்படி சித்திரை மாதம் அண்ணாமலையார் கோவிலில் நடராஜர் சன்னதியில் நேற்று தமிழ் வருடத்தின் சித்திரை மாத முதல் அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவோண நட்சத்திரத்தில் சிவகாமிசுந்தரி நடராஜப் பெருமானுக்கு பச்சரிசி மாவு¸ அபிஷேக பொடி¸ பஞ்சாமிர்தம்¸ இளநீர்¸ எலுமிச்சைச்சாறு¸ பால்¸ தயிர்¸ தேன்¸ சந்தனம்¸ விபூதி¸ பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இளவரசுப் பட்டம் அருணாச்சல சிவாச்சாரியார் ஸ்தபன பூஜை செய்தார். ஸ்தபனத்தில் இருக்கும் புனித நீரை கொண்டு நடராஜப் பெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு விசேஷ அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா தொற்று உலகெங்கிலும் அசுர வேகத்தில் பரவி உயிர் பலிகளும் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பிடியிலிருந்து உலகம் விடுபடவும்¸ மக்கள் நோய்¸ நொடி இன்றி சுபிட்சமாக வாழவும்¸ அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் அறிவுறுத்தலின் பேரில் நடராஜர் வழிபாட்டின் போது சிவாச்சாரியார்கள் அதற்கான மந்திரங்களை ஓதி சாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர்.
கொரோனா தொற்று காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்ணாமலையார் கோயிலில் நேற்று சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்களைக் கொண்டு எளிமையான முறையில் நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது