நெல் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.138 கோடி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
திருவண்ணாமலை வட்டம்¸ பெரியகிளாம்பாடி ஊராட்சியில் இன்று (07.06.2021) கரீப் பருவம் 2020-2021 ஆண்டிற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு சட்டரேவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்
சி. என். அண்ணாதுரை¸ கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தி .சரவணன்¸ திருவண்ணாமலை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழககத்தின் மண்டல மேலாளர் கோபிநாத்¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்¸ கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள்¸ விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்¸ விவசாயிகள்¸ பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்ததாவது¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழககத்தில் சார்பில் கடந்த கரீப் பருவம் 2020-2021 ஆம் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து 81¸000 மெட்ரிக் டன் நெல் நேரடி கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 17¸500 விவசாயிகளுக்கு ரூ.138.00 கோடி அவர்களது வங்கி கணக்கில் ECS மூலம் நேரடியாக செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 51 நேரடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 52வது நேரடியாக நெல் கொள்முதல் நிலையம் பெரியகிளாம்பாடி ஊராட்சியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார 12 கிராம விவசாயிகள் அறுவடை செய்த நெல்லினை இந்த கொள்முதல் நிலையத்தில் விற்று பயன்பெறுவார்கள்.
இக்கொள்முதல் நிலையம் திறக்கும் முன்னர்¸ இச்சுற்றுவட்டார கிரமாங்களில் இருந்து துரிஞ்சாபுரம் ஒன்றியம் நார்த்தாம்பூண்டி நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லினை விற்றுவந்தனர். தற்போது¸ பெரியகிளாம்பாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்ததால் விவசாயிகளின் நேரம் மற்றும் கால தாமதத்தினை தவிர்த்து உடனுக்குடன் அறுவடை செய்த நெல்லினை விற்பதற்கு வசதியாக இக்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
மேற்படி கரீப் பருவம் 2020-2021 ஆம் ஆண்டிற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1958 மற்றும பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1918 என தமிழ்நாடு அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும்¸ விவசாயிகளின் நலன் கருதி¸ அவர்களிடமிருந்து பெறப்படும் நெல்லுக்கு உண்டான தொகை அவர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் நேரடியாக செலுத்தப்படும்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை அறுவடை செய்து¸ பின்பு தங்களின் சொந்த இடத்தில் நன்கு காய வைத்து¸ பாதுகாத்து பின்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து டோக்கன் பதிவு செய்து¸ அதன்பின் கொள்முதல் அலுவலர் தெரிவிக்கும் தேதிக்கு முந்தைய நாளில்¸ விவசாயிகள் தங்கள் நெல்லினை கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்து பயனடையலாம்.
இவ்வாறு கு.பிச்சாண்டி தெரிவித்தார்.