அர்ச்சகர்கள்¸ பட்டாச்சாரியார்கள்¸ பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக ரூ.4000-ம் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள்¸ பட்டாச்சாரியார்கள்¸ பூசாரிகள்¸ இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில்¸ திருக்கோயில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.
இதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலித்து¸ அவர்களுக்கு ரூ.4000-ம் உதவித் தொகை¸ 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்க உத்தரவிட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருக்கோயில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் 807 அர்ச்சகர்கள்¸ பட்டாச்சாரியார்கள்¸ பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகை ரூ.4000-ம்¸ 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் ஆகிய நிவாரண உதவிகளை இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்¸ துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை¸ சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பெ. கிரி (செங்கம்)¸ திரு. பெ. சு. தி. சரவணன் (கலசபாக்கம்)¸ மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன்¸ துணைத் தலைவர் பாரதி ராமஜெயம்¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ இந்து சமய அறநிலையத் துறை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் த. கஜேந்திரன்¸ அருணாசலேசுரர் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகர்¸ உதவி ஆணையர் ஜான்சி¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் மற்றும் அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
எ.வ.வேலு கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்¸ உதவியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தினமும் 4750 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மட்டும் 2500 உணவுப் பொட்டலங்கள் தினமும் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை¸ ஆரணி¸ வந்தவாசி¸ செய்யாறு ஆகிய அரசு மருத்துவமனைகள்¸ வேட்டவலம்¸ கீழ்பென்னாத்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்¸ உதவியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருணாசலேசுரர் திருக்கோயில்¸ காமாட்சியம்மன் திருக்கோயில்¸ டி.பி.எஸ். அறக்கட்டளை¸ படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில்¸ ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் திருக்கோயில்¸ செய்யாறு வேதபுரீசுவரர் திருக்கோயில்¸ எலத்தூர் மோட்டூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் தென்மாதிமங்கலம் மல்லிகார்ச்சுனேசுவரர் திருக்கோயில்¸ ஆகிய திருக்கோயில்கள் சார்பில் தற்போது வரை 1¸42¸500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.