திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிட்-19 தொடர்பான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் கோவிட் நோய் தொற்று இல்லாத மாவட்டம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் கோவிட்-19 நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க மருத்துவ வட்டார அளவில் துணை ஆட்சியர் நிலை அலுவலர்களின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்¸ வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் அடங்கிய 19 குழுக்களை அமைத்துள்ளார். காய்ச்சல் முகாம்கள்¸ தடுப்பூசி முகாம்கள்¸ அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும்¸ ஆக்ஸிஜன் அளவினை பரிசோதிக்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள்¸ சுய உதவிக்குழுமகளிர்¸ தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேற்படி 19 குழுக்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வட்டாரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள்¸ கிராம நிர்வாக அலுவலர்¸ பஞ்சாயத்துதலைவர் ஆகியோரை ஒருங்கிணைத்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகப்படுத்தவும்¸ கோவிட் தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு உள்ள அச்சங்களை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் குறுவட்ட அளவில் வருவாய் ஆய்வாளர்¸ துணை வட்டார வளர்ச்சி அலுவலர்¸ காவல்துறை அலுவலர்களை கொண்ட 54 மண்டல அமலாக்க குழு(Zonal Enforcement Team) (ZET) ஏற்படுத்தபட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் பொது இடங்களான வியாபார மையங்கள்¸ ஓட்டல்கள்¸ திருமண நிகழ்வுகள் போன்ற இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளி¸ முககவசம் அணிதல் போன்றவை கடைபிடிப்பதை கண்காணித்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவும் இக்குழுக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்¸ கோவிட்-19 தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் கோவிட்-19 தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 04175-1077¸ 04175-233344¸ 04175-233345 என்ற எண்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.