பர்வதமலை போன்று புற்று வடிவில் காட்சியளித்து பக்தர்களுக்கு துணை நிற்கும் ஆதி நாகாத்தம்மன்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கடலாடி (கடவுள் பாதம் பட்ட இடம்) கிராமத்தில் இருந்து பர்வதமலைக்கு செல்லும் அடிவாரத்தில் மூலிகை மனம் வீசும் காட்டுக்குள் தொன்மையும் வரலாற்று பெருமையும் கொண்ட புற்றுநாகாத்தம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள புற்றை சுற்றி மனிதனின் ஐம்புலன்களையும் குறிக்கும் வகையிலும் பஞ்சபூதங்களை குறிக்கும் வகையிலும் ஐந்து திரிசூலங்கள் வேயப்பட்டுள்ளது. இந்த அம்மனை பர்வதமலைக்கு செல்லும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வணங்கிச்செல்கின்றனர். அப்படி சென்றால் தங்குதடையின்றி மலையேறி மல்லிகார்ஜுனரையும் பிரம்மராம்பிகை தாயாரையும் தரிசிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் அம்மை நோய் திருமண தோஷம் கடன் பிரச்சனை தீரவும் கண் நோய் நீங்கவும் கல்வியில் சிறக்கவும் நாகாத்தம்மனுக்கு 23 விளக்கேற்றி வழிபடுகின்றனர். இந்த அம்மனை குலதெய்வமாகவும் கிராம காவல் தெய்வமாகவும் சுற்றுப்புற கிராம மக்கள் வணங்குகின்றனர்.
குழந்தை வரத்திற்காக 4620 அடி உயர கோவில்
நன்னன் என்ற குறுநில மன்னன் இப்போதுள்ள செங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு கி.பி. 3ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் ஊர்கள் பல செழிப்புற்றன. மன்னனுக்கு வரிவசூல் பணம் தலைக்குமேல் குவிந்தது. ஆனால் தனக்கு இதையெல்லாம் ஆள வாரிசு இல்லையே என்று வருந்திய மன்னன் அரசவையில் உள்ள புலவர்களிடம் கேட்க அரசவை புலவரோ சதுரகிரி வெள்ளையங்கிரி பொதிகை மலை சுருளிமலைபோல் வடகிழக்கில் நவீரமலை (இப்போதுள்ள பர்வதமலை)யில் கோவில் கட்டி அம்பாளை பிரதிஷ்டை செய் என்று கூறினார் புலவர். உடனே மன்னன் பர்வதமலையில் தங்க கோட்டையும் கோவிலும் கட்டினான். பின் குழந்தை பாக்கியம் பெற்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இறுதியாக பத்து பாட்டில் அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன் சேய் நன்னன் என்ற குறுநில மன்னன் பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதை இப்போது பர்வதமலை என்றே அழைக்கின்றனர். நவிரம் என்றால் மூங்கில் செழித்து வளரும் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கத்தை அந்நாளில் செங்கமாதேவி என்றும் செங்கமா நகர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
புற்று வடிவில் பருவதமலை
நந்தி வடிவாகவும் சிங்கமுகத்துடனும் காணப்படுவதும் அடிவாரத்தில் நாகத்தம்மன் புற்று பருவதமலை தோற்றம் போல் காணப்படுவது இத்தலத்தின் சிறப்பு
மன்னனை மெய்சிலிர்க்க வைத்த நாகாத்தம்மன்
கடலாடி வழியாக மன்னன் தனது பரிவாரங்களுடன் மலைக்கு கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்லும்போது முன்னே சென்ற குதிரை பிளிரி பின்னுக்கு வந்தது. மீண்டும் குதிரையை விரட்டியபோது கனைத்து இரண்டு கால்களையும் மேலே தூக்கி பின்னுக்கு வந்தது. அப்போது அதேகிராமத்தைச் சேர்ந்த ஆடுமேய்க்கும் சிறுமி வந்து மன்னனிடம் இங்கு நாகாத்தம்மன் புற்று உள்ளது. நீங்கள் இப்பகுதியை கடக்கும்போது பூட்ஸ்களை கழற்றி கையில் எடுத்துச்செல்லுங்கள் தங்குதடையின்றி மலையை அடைவீர்கள் என்று சொல்லி சிறிது நேரத்தில் மறைந்தாள் அந்த சிறுமி. மன்னன் ஆட்களை விட்டு அந்த சிறுமி தேடியபோது எங்கும் காணவில்லை. தனக்கு அருள்தந்தது அந்த ஆதிபராசக்தியே என்று மெய்சிலிர்த்து போனான் மன்னன்.
குழந்தை பாக்கியம் தரும் வேப்பமரம்
நாகாத்தமன் கோவில் பின்புறமுள்ள வேப்பமரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தொட்டில் கட்டினால் மறுவருடமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அப்படி குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் மழலை செல்வத்துடன் வந்து வேப்பமரத்துக்கு அபிஷேகம் செய்து ஆடைகட்டி மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர். நாகதோஷம்¸ காலசர்ப தோஷம் உள்ளவர்களும் குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்றவற்றிற்கும் நாகாத்தம்மனுக்கு பால் பன்னீர் மஞ்சள் அபிஷேகம் செய்து நெய்விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
நிசப்தமான இடத்தில் நாகாத்தம்மா
பர்வதமலையில் எழுந்தருளியுள்ள பிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜூனரை 18 சித்தர்களும் மகான்களும் ஞானிகளும் காண ஒன்று கூடுவர். அப்போது சிவபெருமான் வேதங்களை கற்றுத் தருவார். இதற்கு பூதகானங்களால் இடையூறு ஏற்படாதவாறு ஆதிபராசக்தியே அடிவாரத்தில் நாகத்தம்மனாக காவல் காப்பதாக செவிவழி செய்தியாக சொல்லப்படுகிறது. காட்டிலுள்ள தேவதைகளும் இரவு நேரத்தில் நாகம்மனுக்கு பூஜை செய்வதும் அபிஷேகம் செய்வதுபோல் சலசலப்பு கேட்பதாக கிராம மக்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.
மகான் மவுனயோகி
பர்வதமலை மகான் மவுனயோகி விட்டோபானந்தா சுவாமிகள் பர்வதமலைக்கு செல்லும் முன் புற்று நாகாத்தம்மனை சிலகாலம் வழிபட்டு பின் பர்வதமலையில் மவுன விரதம் 15 ஆண்டுகளாக இருந்தார். இவர் மவுனவிரதம் இருந்த இடத்தின் அருகே புற்று ஒன்று இருந்தது. அதற்கு புற்று மலை என்று பெயரை கண்டு வியந்து அதனருகே பெரிய திரிசூலம் ஒன்றை மலையில் சொருகி வழிபட்டு வந்தார். பின் முக்தியடைந்தார்.
புற்றுகோயிலை பராமரிக்கும் இயற்கை ஆர்வலர்
புற்று இருக்கும் இடத்தில் சுயம்புவாக அம்மன் சிறிய வடிவில் காட்சி கொடுத்துவந்தாள். பின்னர் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் 1972 முதல் புற்று நாகாத்தம்மனுக்கு பூஜை செய்து வந்தார். அம்மன் அவர் கனவில் தோன்றி எனக்கு உருவ வழிபாடு வேண்டுமென அன்பாக முறையிட்டதன்பேரில் நாக கிரீடத்துடன் 2 கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்தார். புற்றை சுற்றி மூலிகை செடிகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். மலையேறுபவர்களுக்கு கைகால் வலி குடைச்சல் தலைவலி போன்றவற்றிற்கு தான் வளர்த்துவரும் மூலிகைகளை இலவசமாக கொடுத்து நோய் தீர்த்து வைக்கிறார்.
மேலும் உயிர் காக்கும் மூலிகைகளான தவசி முருங்கை¸ கோபுரம் தாங்கி¸ பேய்விரட்டி¸ சிரியாநங்கை¸ வீராலி¸ தொட்டசினுங்கி¸ யானைநெரிஞ்சி¸ கவிழ்தும்பை¸ ஆடை ஒட்டி¸ நேத்திரை பூண்டு¸ ஓர் இதழ் தாமரை போன்ற அரிய வகை மூலிகைகளை வளர்த்து வருகிறார். மலையேறுபவர்களுக்கு வழிகாட்டியாக உள்ள இவரை கடலாடி வழி செல்பவர்கள் பார்க்காமல் செல்வதில்லை என்பது சிறப்பு. பர்வதமலைக்கு செல்லும் பாதையை சீரமைத்து அரிய வகை மூலிகைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு புற்று ஆறுமுக சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவிழா
சித்திரை ஆடி மாதங்களில் அம்மனுக்கு கூழ்வார்க்க சுற்றுப்புற கிராம மக்கள் ஒன்றுகூடி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்புக்கு
பர்வதமலை மகான் மவுனயோகி சீடர்
கடலாடி புற்று ஆறுமுகம் 9786259772
அமைவிடம்
திருவண்ணாமலையிலிருந்து காஞ்சி வழியாக 23 கி.மீ. தூரத்தில் கடலாடி உள்ளது. கடலாடி பஸ் நிறுத்தத்திலிருந்து பர்வதமலையடிவாரத்திற்கு நடந்து செல்லும் தூரத்தில் நாகத்தம்மன் கோவில் உள்ளது.
–ப.பரசுராமன்