திருவண்ணாமலை அருகே பிரபலமான நிறுவனங்களின் பெயிண்ட்டை போலியாக தயாரித்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அடுத்த கண்ணகுருக்கை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்புதுரை (வயது 28). தந்தை பெயர் அண்ணாதுரை. இவரது உறவினர் ஒருவர் பெங்களுருவில் பெயிண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தில் அன்புதுரையும் வீட்டிலேயே பெயிண்ட் விற்று வந்தார்.
இதில் லாபம் அதிகம் பார்க்க ஆசைப்பட்ட அன்புதுரை¸ பிரபலமான கம்பெனிகளின் பெயரில் போலி பெயிண்ட்டுகளை தயாரிக்க ஆரம்பித்தார். கடைகளை விட குறைவான விலைக்கு கிடைத்ததால் ஏராளமானோர் அவரிடம் பெயிண்ட்டுகளை வாங்க ஆரம்பித்தனர். மார்க்கெட்டில் போலி பெயிண்டுகள் நடமாட்டம் இருப்பது குறித்து ஏசியன் மற்றும் பெர்கர் பெயிண்ட கம்பெனிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த கிராமத்திற்கு பெயிண்ட் கம்பெனிகள் நிர்வாகிகள்¸ வாடிக்கையாளர்களை போல் சென்று பெயிண்ட்களை விலை கொடுத்து வாங்கினர். பிறகு அந்த பெயிண்ட்டுகளை பரிசோதனை கூடத்தில் சோதனை செய்ததில் அவை போலி என்று தெரிந்தது.
இது குறித்து அந்த கம்பெனிகள் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளித்தனர். இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன் குமார் ரெட்டி உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு மு.சரவண குமரன் மேற்பார்வையில்¸ மேல்செங்கம் இன்ஸ்பெக்டர் எஸ். செங்குட்டுவன் தலைமையில்¸ பாச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று அன்புதுரை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் ஏசியன் மற்றும் பெர்கர் கம்பெனிகளின் பெயிண்ட்டுகளை போலியாக தயாரிக்க பயன்படுத்திய இரண்டு இயந்திரங்கள்¸ ஒரு கணினி¸ ஏசியன் 527 லிட்டர் கொண்ட 60 பாக்கெட்டுகள்¸ 282 லிட்டர் கொண்ட பெர்கர் பெயிண்ட் 109 பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.88ஆயிரத்து 970 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புதுரையை கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். போலி பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.