சடலத்துடன் சாலை மறியல் |
ரூ.1லட்சம் கடனுக்கு ரூ.7லட்சம் வரை வட்டி வசூலித்து நிலத்தையும் அபகரித்ததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயின் உடலை ரோட்டில் வைத்து போராட்டம்
திருவண்ணாமலை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலைமறியலால் பரபரப்பு
திருவண்ணாமலை அடுத்த சின்னபாலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 48) லாரி உரிமையாளர். செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு சசிகலா(37) என்ற மனைவியும்¸ கார்த்தி(16)¸ முகிலன்(11)ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு தொழிலுக்கு முதலீடு செய்வதற்காக ராமஜெயம்¸ கோட்டாங்கல்லைச் சேர்ந்த வடிவேல் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். அதிக வட்டிக்கு வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் ராமஜெயம் ரூ.15ஆயிரம் வட்டி கட்டியதாக சொல்லப்படுகிறது. இதுவரை ரூ.7 லட்சம் அளவிற்கு வட்டி கொடுத்துள்ளதாகவும்¸ கடனுக்காக ராமஜெயத்தின் 95 சென்ட் நிலத்தை வடிவேல் தனது மருகன் மகேஷ்குமார் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.7 லட்சம் கொடுத்தது மட்டுமன்றி நிலமும் கைவிட்டு சென்று விட்டதே என ராமஜெயம் மன உளைச்சல் அடைந்தார். வேதனை தாங்க முடியாமல் ராமஜெயம் நேற்று மாலை கோலாப்பாடி பகுதிக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் ராமஜெயத்தின் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற குடும்பத்தினர் இன்று காலை திருவண்ணாமலை-பெங்களுர் சாலையில் ராமஜெயத்தின் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதில் அவர்களது உறவினர்கள்¸ கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
எஸ்.பி பேச்சு வார்தை |
தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். ராமஜெயம் மரணத்திற்கு காரணமான வடிவேல் மீது நடவடிக்கை எடுக்கவும்¸ அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தரவும் ராமஜெயத்தின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததை அடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தினால் 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.