Homeசெய்திகள்கோயிலுக்கு யானை வேண்டும் என கேட்காத பிரமுகர்கள்

கோயிலுக்கு யானை வேண்டும் என கேட்காத பிரமுகர்கள்

கோயிலுக்கு யானை வேண்டும் என கேட்காத பிரமுகர்கள்

திருவண்ணாமலை வளர்ச்சிக்கான ஆய்வு கூட்டத்தில் கோயிலுக்கு யானை வேண்டும் என யாரும் கோரிக்கை வைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளர்ச்சி குறித்தான ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில்  இன்று  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி¸ கலெக்டர் பா.முருகேஷ் மற்றும் நாடாளுமன்ற¸ சட்டமன்ற உறுப்பினர்கள்¸ நகர பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். 

இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது¸

கலைஞர் அவர்களால் 1989 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முகவரி அளிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருவண்ணாமலையில் 10 நாள் நடைபெறும் கார்த்திகை தீபம் நிகழ்விற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இருந்ததை விட¸ ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள்¸ பொதுமக்கள் கூடுகிறார்கள். திருவண்ணாமலை இந்த மாவட்டத்தின் தலைநகர் மட்டும் அல்ல¸ ஆண்மீக நகரமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல்¸ பல்வேறு மாநிலங்களிலிருந்தும்¸ உலக நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

நமது மாநிலத்தின் புகழ் பெற்ற ஆன்மீக நகராக திருவண்ணாமலை திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச் சென்று திருநகர் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய பணிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும். திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளர்ச்சிக்கான ஆய்வுக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டுள்ளனர். 

 ஆய்வுக் கூட்டத்தில் பல நல்ல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் அதனை செயல்வடிவம் கொடுத்திட  முனைப்புடன் செயல்பட வேண்டும். குடிநீர்¸ குளியல்¸ கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

See also  திருவண்ணாமலை கோயிலில் உள்ளுர் மக்களுக்கு அநீதி

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேம்பாடு¸ செங்கம் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு¸ திருவண்ணாமலை மையப் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்தல்¸ இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம்¸ வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் மற்றும் தாமரை நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரம் மற்றும் வேங்கிக்கால் பகுதிகளில் பல்வேறு தொற்று வியாதி பாதிப்பு ஏற்படுத்தி வரும் ஈசான்யம் குப்பை பகுதியை நகரத்தின் வெளியில் அமைக்க வேண்டும்¸ சின்னக் கடை தெரு விரிவாக்கம்¸ கூடுதல் மின்சார எரிவாயு தகன மேடை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்தில் 2006-2011 கழக ஆட்சியில் நகர காவல் நிலையம்¸ கிழக்கு காவல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது 14 கி.மீ. கிரிவலப் பாதை மேற்கு பகுதியில் ஒரு காவல் நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 

திருவண்ணாமலை நகரத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க காவல் துறைக்கு கூடுதல் சிசிடிவி கேமரா வசதி ஏற்படுத்தி தர வேண்டும்¸ அரசுக் கலைக் கல்லூரி எதிர்புறம் உள்ளிட்ட அரசு அலுவலர் குடியிருப்புகள் புதுப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவம் அதிகமாக நடைபெறுகிறது¸ அதனை மேலும் மேம்படுத்திடவும்¸ பழைய அன்னதானக் கூடம் புதுப்பிக்கவும்¸ திருவண்ணாமலை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால்¸ கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தருவதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களிடம் இன்று காலை பேசியுள்ளேன்¸ விரைவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

See also  அரசு ஆஸ்பத்திரியில் பிரிட்ஜ் வெடித்து சிதறியது

திருவண்ணாமலை நகரத்தின் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணவும்¸ புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. திருவண்ணாமலை நகரத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும்¸ பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருவதாலும்¸ தமிழ் வளர்ச்சிக்காவும்¸ ஒரு புதிய விரிவான நூலகம் அமைக்க வேண்டும்¸ திருவண்ணாமலை பெருமை¸ வரலாறு¸ ஆன்மீகம் தொடர்பான ஒரு புத்தகம் வெளியிட கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைத்து நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி திருவண்ணாமலை தலைநகர் மற்றும் ஒட்டு மொத்த மாவட்டத்தின் பெருமைகள் குறித்த புத்தம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

திருக்கோயிலுக்கு வரும் வயதானவர்கள் பயன்பாட்டிற்கு பிரகாரம் வரை செல்வதற்கு ஒரு பேட்டரி கார் மட்டும் உள்ளது¸ கூடுதலாக 4 பேட்டரி கார்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை செம்மைப்படுத்த ஒரு உயர்மட்ட குழு அமைத்துள்ளார். இக்குழு மூலம் திருவண்ணாமலை திருக்கோயில் மேம்படுத்துவற்கு எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டின் தற்போது நிதி நிலை சரியாக இல்லை¸ முதலமைச்சர் அவர்கள் 10 நாட்களில் தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளார். 

இது ஒரு கருத்து கேட்பு கூட்டம் தான். திட்டங்கள் அறிவிப்பு கூட்டமல்ல. எனவே நிதி நிலைக்கு ஏற்ப திட்டங்கள் நிறைவேற்றிட உறுதுணையாக இருப்பேன்.

See also  உடற்கல்வி ஆசிரியர் திடீர் மாற்றம்- மாணவர்கள் ஸ்டிரைக்

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நகர பிரமுகர்கள் யாரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கோயிலில் யானை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த எ.வ.வேலு தமிழ்நாடு¸ கேரளா¸ கர்நாடகாவில் யானை இல்லை¸ ஜார்கண்ட் மாநிலத்தில்தான் உள்ளது. எனவே அங்கிருந்து யானையை வாங்கி வர 4 துறைகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டியதுள்ளது. இது முடிய 6 மாதங்கள் ஆகலாம். அதன்பிறகு யானையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 23 ஆண்டுகளாக உற்சவங்களில் பங்கேற்று பக்தர்களை ஆசீர்வதித்து வந்த யானை ருக்கு 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ந் தேதி நள்ளிரவு திடீரென உயிரிழந்தது. சென்ற ஆட்சியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தும் கோயிலுக்கு யானை வாங்கப்படவில்லை. கடைசியாக தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அவரும் விரைவில் யானை வாங்கப்படும் என திருவண்ணாமலைக்கு வந்த போது உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி காற்றில் போனது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கோயிலுக்கு யானை வாங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். எ.வ.வேலும் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!