திருமணமாகியும் காதலியை மறக்காத போலீஸ்காரர் தகராறில் ஈடுபட்டதால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளுர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பிரசாந்த். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே உள்ள இலுப்பந்தாங்கல் கிராமமாகும்.
அதே கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுடன் பிரசாந்த்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார்களாம். இது பிரசாந்த்தின் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத அவர்கள் பிரசாந்த்துக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.
காதல் கை கூடாத சோகத்தில் இருந்த பிரசாந்த்¸ மனைவி ரேவதியிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார். கணவனின் காதல் கதை ரேவதிக்கு தெரிய வந்தது. தனது வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் கணவனின் பழைய காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த ரேவதி¸ கணவனை அழைத்துக் கொண்டு சாந்தியின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு தனியாக இருந்த சாந்தியிடம் உன்னால்தான் என் புருஷன் என்னுடன் வாழாமல் உள்ளார் என கூறி ரேவதி வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது. தனக்கு மாப்பிள்ளை பார்க்க வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய தனது உறவினர்களிடம் இது பற்றி சாந்தி தெரிந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர் ஆறுமுகம்(60) பிரசாந்த் வீட்டிற்கு சென்று இது பற்றி தட்டிக் கேட்டார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் ஆறுமுகத்தை¸ பிரசாந்த்¸ அவரது தந்தை சின்னத்துரை¸ மைத்துனர் ராஜா ஆகியோர் சேர்ந்து கட்டையாலும்¸ கல்லாலும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரை வேட்டவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் பிரசாந்த்¸ சின்னதுரை¸ ராஜா ஆகியோரை தேடி வருகிறார். இதற்கிடையே தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் பிரசாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கை கூடாத காதலை மறந்து புதிய உறவில் உண்மைத் தன்மையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் ஆபத்தை நோக்கி பயணிக்கிறார்கள் என்பதே இச்சம்பவம் சொல்லும் பாடமாகும்.