திருவண்ணாமலை கோயிலுக்கு விரைவில் யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதியதாக பொறுப்பேற்ற கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பா.முருகேஷ் இன்று பகல் பொறுப்பேற்றுக் கொண்டார். கோப்புகளில் கையெழுத்திட்ட பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
சீறான¸ சிறப்பான ஆட்சி
தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரோனா குறைந்திருக்கிறது. சீறான¸ சிறப்பான ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதம் சிறப்பாக கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொண்ட காரணத்தால் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. எனது முதல் பணி கொரோனா தொற்று தடுப்பு பணிகள் மற்றும் முழுமையாக கட்டுப்படுத்தி 0 கேஸ் என்ற இலக்கை அடைவதாகும்.
விழிப்புணர்வு இல்லை
சிலர் முக கவசம் அணியாமல் செல்வதை நான் இங்கு வரும் வழியில் பார்த்தேன். மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க குழுக்களை அதிகப்படுத்த வேண்டும்.
நீண்ட கால திட்டம்
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அதிகரிக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள்¸ சுகாதாரம்¸ சுற்றச்சூழல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆன்மீக ஸ்தலமான திருவண்ணாமலை மேம்படுத்தவும்¸ சுற்றுலா பயணிகள் ஈர்க்கவும் நீண்ட கால திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும். இதற்கான திட்டங்கள் நிறைய உள்ளது. அரசின் வழிகாட்டுதல் படியும் மற்றும் அமைச்சர் ஆலோசனைப் படியும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக யானை இல்லாதது குறித்தும்¸ யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்தும் கலெக்டரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆன்மீக அன்பர்களிடம் ஆலோசனை
இதற்கு பதிலளித்த அவர் கண்டிப்பாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்¸ இது சம்மந்தமாக ஆன்மீக அன்பர்களிடம் கலந்தாலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரதாப் ஆகியோர் உடனிருந்தனர்.
சொந்த ஊர் திருநெல்வேலி
44 வயதாகும் புதிய கலெக்டர் முருகேஷின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டமாகும். 2012ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். முடித்த அவர் மெட்ரோ ரயில் நிர்வாகத்திலும்¸ உள்துறை துணை செயலாளராகவும்¸ வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார்.