திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி வந்த 3 வாலிபர்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தர்ம அடி விழுந்தது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை சிறுமியுடன் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை சிலர் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தனர். இதனால் அங்கு கூட்டம் சேர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசார் அந்த இளைஞர்களையும்¸ சிறுமி மற்றும் தாக்கியவர்களையும் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு¸
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா வேப்பேரியை சேர்ந்தவர் சர்தார். இவரது 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 16 வயது சிறுமி ஒருவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பகுதியில் வேலூர் விருப்பாச்சிபுரம் பாறைமேட்டைச் சேர்ந்த சேட்டுவின் மகன் விக்னேஷ் (வயது.18) பழக்கடை வைத்திருந்தார். அப்போது 16 வயது சிறுமியுடன் விக்கேஷ்சுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது சிறுமியை காதலிப்பதாகவும்¸ திருமணம் செய்து கொள்வதாகவும் விக்னேஷ் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியை கடத்தி வந்து திருமணம் செய்ய விக்னேஷ் திட்டமிட்டார். தனது நண்பர்களான போளுர் ரெண்டேரிப்பட்டைச் சேர்ந்த முனியப்பனின் மகன் நந்தகுமார்(19)¸ வேலூர் விருப்பாச்சிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பி.காம் படித்து வரும் ஹரிகிருஷ்ணனின் மகன் பவன் கல்யாண் (17) ஆகியோர் உதவியுடன் இன்று அதிகாலை 3மணி அளவில் 16வயது சிறுமியை ¸அவரது வீட்டிலிருந்து கடத்திக்கொண்டு விக்னேஷ் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் வீட்டருகில் இருந்த பஸ் கண்டக்டர் சிறுமியை 3 பேர் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு செல்வதை பார்த்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு டாடா ஏஸ் வாகனத்தில் பெண்ணை தேடி புறப்பட்டனர்.
திருவண்ணாமலைக்கு வந்து கோயில் மற்றும் பஜார் பகுதிகளில் தேடினர். பிறகு மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு சிறுமியுடன் 3 பேர் நிற்பதை பார்த்து ஆத்திரமடைந்து சரமாறியாக தாக்கி சிறுமியை மீட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு சிறுமி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி வந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பிரம்மதேசம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
கடத்தல்காரர்களை பின்தொடர்ந்து வந்து அவர்களிடமிருந்து மகளை பெற்றோர்கள் மீட்டுச் சென்ற சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.