திருவண்ணாமலை¸ திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த காவலர் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான உடற்தகுதி தேர்வு திருவண்ணாமலையில் 26ந் தேதி நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் என்றும்¸கொரோனா இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்றும் காவல்துறை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது¸
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2020 – 2021ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள்¸ சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்புவீரர் ஆகிய பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல்¸ உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகியவை நடைபெறவுள்ளது.
சான்றுகள் சரிபார்ப்பு¸ உடற்கூறு அளத்தல்¸ உடற்தகுதி தேர்வுகள் வரும் 26.07.2021-ம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது.
தேர்வில் கலந்துக்கொள்ள வரும் விண்ணப்பதார்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வருமாறு:-
1.உடற்தகுதி தேர்விற்கான அழைப்பு கடிதத்தை கொண்டுவர வேண்டும். (விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி தேர்விற்கான அழைப்பு கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்)
2.தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட தேதியில்¸ குறிப்பிட்டநேரத்தில் ஆஜராக வேண்டும்.
3.தேர்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக கோவிட்-19 பரிசோதனை செய்து அதற்கான மருத்துவசான்று எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு மருத்துவசான்று பெற்று வராத தேர்வாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
4.தேர்வாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனையில் positive என தெரியவந்தால்¸ தேர்வாளரின் பெற்றோர்&பாதுகாவலர்¸ தேர்வாளரின் தேர்வு நாளன்று மருத்துவச்சான்றை தேர்வு மைய தலைவரிடம் நேரில் சமர்பிக்க வேண்டும்.அத்தேர்வாளரின் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
5.தேர்வாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் மற்றும் கைவசம் இரண்டு முகக்கவசம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
6. தேர்வாளர்கள் கலந்துகொள்ளவரும் போது ஏதாவது அரசு அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (AADHAR, PAN, VOTER ID, etc) கொண்டுவர அறிவுறுத்தப்படுவதோடு¸ அசல் சான்றிதழ்கள் கட்டாயமாக கொண்டு வரவேண்டும். மேலும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.
7. தேர்வாளர்கள் உடற்தகுதி தேர்வில் பங்குபெறும் போது அணிந்து வரும் T-Shirt,TRACK SUIT, SHORTS ஆகிய ஆடைகளில் எந்த ஒரு அடையாளகுறியீடு¸ சின்னங்கள்¸ பெயர்கள் மற்றும் பல வண்ண நிறங்களில் (MULTI COLORS) ஆடைகள் அணிந்து வரக்கூடாது. பிளையின் கலர்ஸ் கொண்ட ஆடைகள் மட்டும் அணிந்து வர வேண்டும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.