திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளிடம் 5081 நெல் மூட்டைகளை வாங்கி ரூ.53 லட்சத்தை மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு¸
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அழகிரி தெருவைச் சேர்ந்தவர் சீனு என்கிற சீனிவாசன்(வயது 46) தந்தை பெயர் சின்னகுட்டி. சீனிவாசன் தேசூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 7 வருடங்களாக விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வந்தார்.
இந்நிலையில் வாங்கிய நெல் மூட்டைகளுக்கு அவர் பணம் சரிவர தராமல் காலம் தாழ்த்தி வந்தார். 05.05.2021 முதல் 25.06.2021 வரை 159 விவசாயிகளிடம் சுமார் 5081 நெல் மூட்டைகளை தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் பெற்றுள்ளதும்¸ அதற்குண்டான ரூபாய் 53 லட்சத்து 71 ஆயிரத்து 142-ஐ விவசாயிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் இரா.தர்மராஜ்¸ மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) சு.ரமேஷ் மேற்பார்வையில்¸ மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் நந்தகுமார் விசாரணை நடத்தி சீனிவாசனை கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதே போல் சேத்துப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சில வருடங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் வாங்கிய நெல் மூட்டைகளுக்கான பணம் ரூ.1½ கோடியை தராமல் ஏமாற்றியதாக கார்த்திகேயன் என்ற வியாபாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒழங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.