ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஒலிம்பிக் செல்ஃபி பாயின்ட் மற்றும் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் வருகிற 23ந் தேதி முதல் ஆகஸ்டு 8ந் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. மேசைப்பந்து விளையாட்டில் ஜி.சத்யன் மற்றும் அ.சரத் கமல் ஆகியோரும். வாள்சண்டையில் சி.ஏ.பவானிதேவியும்¸ பாய்மரப் படகோட்டுதலில் கே.சி.கணபதி¸ வருண் அ.தக்கர் மற்றும் நேத்ரா குமணன் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விiளாயட்டு வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடையே பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கொரோனா என்னும் பெருந்தொற்று நோய்ப்பரவலின் தாக்கம் இருக்கும் இந்த சமயத்திலும் மிக உயர்ந்த விளையாட்டான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் மாவட்டத்தில் விளையாட்டரங்கத்தின் முன்போ அல்லது பொதுமக்கள் கூடும் முக்கியமான இடத்திலோ சாலை ஓரமாக இம்மாதம் 22ந்தேதி வரையில் ஒலிம்பிக் செல்ஃபி பாயின்ட் (Olympic Selfie point) ஏற்படுத்தி மக்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பா.முருகேஷ் |
மேலும் ஆன்லைன் ஒலிம்பிக்வினாடி வினா போட்டியும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் முறை வருமாறு¸
1.டோக்கியோவினை நோக்கி சாலை (ROAD TO TOKYO 2020) எனும் தலைப்பில் அனைத்து வயதினருக்குமான ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டிக்கு https://fitindia.gov.in/ என்னும் இணையதளத்தில் ROAD TO TOKYO 2020 Quiz என்னும் இணைப்பில் கலந்துகொள்ளலாம்.
2.இந்த இணைப்பில் 120 வினாடிக்குள் பதிலளிக்கும் வகையில் ஒலிம்பிக் குறித்த வரலாறு¸ ஒலிம்பிக் விளையாட்டில் அடங்கியுள்ள விளையாட்டுப்பிரிவுகள்¸ வீரர்களின் முந்தைய மற்றும் தற்போதைய சாதைகள்¸ உலக அளவில் படைக்கப்பட்ட சாதனைகள் ஆகியவற்றைக் குறித்த 10 கேள்விகள் இருக்கும்.
3.ஒரு நபர் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும்.
4.ஒருவேளை பங்கேற்பாளர்கள் சமமான மதிப்பெண்கள் பெறும் பட்சத்தில்¸ குறைந்த வினாடிகளில் பதிலளித்தவர் மட்டுமே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.
5.வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அணியின் டி-ஷர்ட் பரிசாக வழங்கப்படும்
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.