Homeசெய்திகள்திருவண்ணாமலை: நடைபாதை எங்கே? தேடிய அதிகாரிகள்

திருவண்ணாமலை: நடைபாதை எங்கே? தேடிய அதிகாரிகள்

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள் நடைபாதையே தெரியாத அளவிற்கு கடைகாரர்கள் ஆக்கிரமித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் முககவசமின்றி இருந்த டிரைவர்¸ கண்டக்டர்¸ வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 7ந் தேதி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக இருந்த நிலையில் 8ந் தேதி 96 ஆக குறைந்தது. தொடர்ந்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 100க்குள் இருந்து வருகிறது. இன்று 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் பலர் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

அதன் பேரில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துகுமரசாமி தலைமையில்¸ வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கொரோனா நோய் பற்றிய அச்சமின்றி பலர் முககவசமின்றி சுற்றித் திரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பயணிகள் மட்டுமன்றி அரசு மற்றும் தனியார் பஸ்களின் டிரைவர்¸ கண்டக்டர்களும் முககவசமின்றி இருந்ததை பார்த்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். 

இதே போன்று பயணிகளிடமிருந்து தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதே போல் பஸ் நிலையம் வெளியே வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நடைபாதையே தெரியாத அளவிற்கு சில கடைகள் ஆக்கிரமித்துள்ளதையும்¸ மேலும் சில கடைகள் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல சிறிது அளவே இடம் விட்டு பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்துள்ளதையும் கண்டறிந்தனர்.  

இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி முத்துகுமரசாமி எச்சரித்துள்ளார். பஸ் நிலைய பகுதியை போன்று பஜாரிலும் பல இடங்களில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் சிரமத்திற்குள்ளாவதாகவும்¸ இந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!