ஓகூர் ஒத்தாண்டேஸ்வரர் கோயிலை கிராம மக்கள் புனரமைத்து வருகின்றனர். இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Okur Othandeswarar
Renovation of the Chola period temple
திருவண்ணாமலை மாவட்டம் புலத்தியபுரம் என்னும் போளூர் அருகே ஓதுவார்கள் வாழ்ந்த ஓகூர் கிராமத்தில் சம்பத்கிரிமலை கனககிரிமலை திருமலை ஆகிய மலைகளுக்கு மத்தியில் குழந்தை முருக பெருமானால் உருவாக்கப்பட்ட செய்யாற்றங்கரையில் 10ம் நூற்றாண்டில் சோழமன்னர்களால் கட்டப்பட்டதும் அகத்தியரால் பூஜித்து வழிபட்ட சிவன்கோவில் உள்ளது.
இத்தலத்தில் சிவபெருமான் சதுரவடிவ லிங்கமாக கிழக்கு பார்த்தவாறு அம்பாள் குளிர்ந்த நாயகியுடன் ஒத்தாண்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவரையும் மனதார வேண்டி மண்டியிட்டு வணங்கினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் அம்மையும் அப்பனும் தருவார்கள் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது.
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் தம்பதியர்கள் மழலைச்செல்வத்துடன் வந்து சுவாமி அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றுகின்றனர். ஒருசிலர் பிரதோஷ தினத்தில் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர். மேலும் மனஅமைதி தரவும் கல்வியில் சிறக்கவும் விவசாயம் செழிக்கவும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவவும் கடன் சுமை குறையவும் வழிபடுகின்றனர்.
குளிர்ந்த நாயகியை மனம் குளிர செய்தால் சுகபிரசவம்தான்
மாங்கல்ய பலம் கூடவும் திருமணமாகாத பெண்களும் நிறைமாத கர்பிணி பெண்களும் அம்மனுக்கு இளநீர் சந்தனம் தேன் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இதன்மூலம் அம்மன் மனதை குளிர்விப்பதால் சுகவாழ்வு தருவாள் அம்பாள் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை.
இங்கு தலவிருச்சமாக வில்வம் உள்ளது. தீர்த்தமாக கோவில் அருகே உள்ள குளத்திலிருந்து கொண்டுவந்து அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தமே சிவதீர்த்தமாக உள்ளது.
கல்வெட்டில் இவ்வூர்
கோவில் சேயாற்றின் கரை அருகே அமைந்துள்ள தொண்டை மண்டலத்து பால்குன்ற கோட்டத்து உட்பிரிவாகிய பங்களா நாட்டில் உள்ள (ஓதுவார்) ஓகூர் ஒத்தாண்டேஸ்வரருக்கு விஜயநகர சம்புவராய அரசர்களும் பல குறுநில மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிற்பகலையுடன் நந்தி
இங்கு சிற்பலையுடன் உள்ள நந்தியின் கொம்புகளின் மத்தியில் நாம் பார்க்கும்போது மூலவர் ஒத்தாண்டேஸ்வரர் காட்சி தருவதோடு சேயாற்றங்கரை அருகே உள்ள திருநதிக்குன்றின் மேல் வள்ளி தெய்வாணையுடன் முருகப் பெருமான் கோவில் கொண்டு அருள்பாலிப்பதும் ஒரே நேரத்தில் இரண்டு கோயில்களின் தரிசனம் காண்பது ஒரு அரிய கண்கொள்ளா காட்சியாகும். மேலும் சிவனின் அருளை பெறவும் வேண்டுதல்கள் தங்கு தடையின்றி நடக்கவும் இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர். இத்தலத்தில் பிரதோஷ தினத்தில் மூலவருக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்யப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும்.
தமிழுக்கு பெருமை சேர்த்த ஓதுவார்கள் வாழ்ந்த ஓகூர்
தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்த தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்யபிரபந்தம் பெரியபுராணம் மற்றும் பதிக பாடல்களை பாடத் தெரிந்தவர்கள் ஓதுவார்கள். புகழ்பெற்ற சைவ மடங்களில் குலகுரு முறைப்படி படித்துள்ள இவர்களுக்கு இன்னமும் கோவில் நிர்வாகம் முறையான சம்பளம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் பாடல்பெற்ற தலங்களில் கூட ஓதுவார்கள் பணியில் இல்லாத அவலம் நீடிக்கிறது.
முற்காலத்தில் மன்னர்கள் ஓதுவார்களுக்கு நிலம் வீடு கட்டிக்கொடுத்து அவர்களை ஆதரித்தனர். இதனால் பரம்பரை பரம்பரையாக ஓதுவார்கள் திருமுறை பண்களை பாடிவந்தனர். காலப்போக்கில் இந்த நிலை மாறியது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளியேற தொடங்கிய ஊர்தான் ஓதுவார்கள் வாழ்ந்த ஓதூர் என்றும்¸ வேதவிர்ப்ன்னர்கள் ஊர்¸ வேதம் ஓதும் ஊர் என்றும் பின்னாளில் மருவி ஓகூர் ஆனது. சைவ பெரியவர் திருநாவுக்கரசர் தேவாரத்தை அரங்கேற்றிய கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டேஸ்வரர் கோவிலிலும்¸ சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தை அரங்கேற்றிய திருவெண்ணை நல்லூரிலும் இன்று தேவாரம் பாட ஓதுவார்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்¸ அக்காலத்தில் நாதஸ்வரம் மேளம் வாசிப்போர்¸ தீவட்டி எடுப்போர்¸ உற்சவ மூர்த்திகளை வீதி உலாவிற்கு எடுத்து செல்வோர்கள் என மன்னர்களால் நிலமானியம் கொடுக்கப்பட்டது.
சிதிலமடைந்த கோவிலில் 300 ஆண்டுகளாக உறங்கிய சிவன்
திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு ஊழியர் அண்ணாமலை என்பவர் சிவபக்தர். இவர் தேர்தல் பணிக்கு ஓகூர் வந்து தங்கியிருந்தார். பிரதோஷ நாட்களில் ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார். அப்படியிருந்த நாட்களில் பிரதோஷ நாள் வந்தது. ஊரில் உள்ளவர்களிடம் இங்கு எங்கே சிவன் கோவில் உள்ளது என்று கேட்க¸ அதற்கு ஊர்மக்கள் இதுவேதம் ஓதுவார்கள் ஊர்¸ இங்கு பெருமாளுக்கு மட்டுமே கோவில் உள்ளது என்று தெரிவித்தனர். அதற்கு அண்ணாமலை¸ யாராவது ஒருவர் என்னுடன் வாருங்கள் என்று சொல்லி¸ அழைத்துக்கொண்டு ‘சேய்’ஆற்றங்கரையோரமாக வந்தபோது கருங்கல் கட்டிடம் மண்மேடாகவும்¸ முட்புதர்கள் அந்த கட்டிடத்தை மறைத்து இருந்தன. முட்புதர்களை முற்றிலும் அகற்றி துவாரத்தின் வழியே உள்ளே சென்று பார்த்தபோது¸ முதலில் நந்தி அவருக்கு காட்சி தந்தது. உடனே உடன் வந்தவரிடம் பூபழம் வெற்றிலை பாக்கு தேங்காய் வாங்கிவரச்சொல்லி பிரதோஷத்தை தொடங்கிவைத்தார்.
அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பிரதோஷங்கள் நடைபெற்று வருகின்றன. பின்னர் ஊர்மக்கள் இளைஞர்கள் சிவபக்தர்கள் முற்றிலும் முட்புதர்களை அகற்றி ஜெசிபி இயந்திரம் மூலம் மண்மேடைகளை சமன்செய்து வழிபாட்டுக்கு கொண்டுவந்தனர். 300 ஆண்டுகளுக்குமேல் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்த கிராம மக்களுக்கு இந்த பழமை வாய்ந்த சிவன்கோவிலை கண்டு மகிழ்ச்சியுற்றனர். பின்னர் ஓகூரிலிருந்து காஞ்சிபுரம் சென்ற ஓதுவார்களிடம் சிவனாலயம் குறித்து தகவல் தெரிவித்தனர். ஓதுவார்கள் சிவபெருமானுக்கு ஒத்தாண்டேஸ்வரர் என்றும்¸ அம்பாளுக்கு குளிர்ந்த நாயகி என்றும் பெயர் சூட்டினர்.
இத்தகைய பழமை வாய்ந்த கோவில் 3 நிலை ராஜகோபுரத்துடன் கட்ட முடிவு செய்து கடந்த 12.05.2019 அன்று பாலாலயம் செய்து திருப்பணியை தொடங்கி¸ தொடர்ந்து செய்து வருகின்றனர். இத்திருப்பணிக்கு பொருளுதவியோ அல்லது பணஉதவியோ கொடுத்து சிவனருள் பெறுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுமான பணி தொடங்கியதிலிருந்து ஊரில் உள்ள ஏரி குளங்கள் கிணறுகள் நிரம்பி விவசாயம் செழிப்பாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
அகத்தியருக்கு கோவில்
ஓகூர் செய்யாற்றங்கரையில் ஒத்தாண்டேஸ்வரரை பூஜித்து வழிபட்ட அகத்தியருக்கு சப்த கரைகண்டேஸ்வரர்கள் உள்ள 6வது கரைகண்ட தலமான பூண்டியில் கோசாலையுடன் சிலை வடிவான கோவில் உள்ளது. இங்கு கர்ப்ப கிரகத்தில் லிங்க ரூபமாக காட்சி தருகிறார். பூலோகத்தில் அகத்திய முனிவர் சிவலிங்க மூர்த்தங்களை அமைத்து பூஜித்த முதல்தளமாகும். ஆகவே இவருக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
லிங்கத்தில் தழும்பு
தேவிகாபுரம் பொன்மலையிலுள்ள கனககிரீஸ்வரருக்கு லிங்கத்தில் வெட்டுபட்ட தழும்பு உள்ளது போல் ஒத்தாண்டேஸ்வரருக்கு உள்ளது அதிசயமே.
தொடர்புக்கு
திருப்பணி குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள்
ஓகூர் ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோவில்
போளுர் வட்டம்¸ திருவண்ணாமலை மாவட்டம்
செல் : 9994438158 ¸ 9790092882
Contact
Okhur Othandeswarar Temple
Polur Circle¸ Thiruvannamalai District
Cell: 9994438158 ¸ 9790092882
————————————————————————————-
OTHANDESWARAR ALAYAM AND EDUCATION TRUST
INDIAN BANK, POLUR – 606 803
A/c. No. 6819537384
IFSC: IDIB000P148
—————————————————–
– ப.பரசுராமன் திருவண்ணாமலை