Homeசெய்திகள்ஓ.பி.எஸ்.அறிக்கை - பொங்கிய விக்கிரமராஜா

ஓ.பி.எஸ்.அறிக்கை – பொங்கிய விக்கிரமராஜா

ஓ.பி.எஸ்.அறிக்கை - பொங்கிய விக்கிரமராஜா

வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கூறிய ஓ.பி.எஸ்¸ அடக்கத்தோடு அறிக்கை வெளியிட வேண்டும் என திருவண்ணாமலையில் விக்கிரமராஜா கூறினார். 

திருவண்ணாமலை கணேஷ் இன்டர்நேஷனல் ஓட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்  தலைவர் விக்கிரமராஜா இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸ 

கொரோனா 3வது அலையை தடுக்க வியாபாரிகள் ஒன்றிணைந்து கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும். கிருமி நாசினி¸ முககவசம் போன்ற தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும். இது சம்மந்தமாக தமிழ்நாடு முழுவதும் சங்கத்தின் நிர்வாகிகளும் நிறுவனங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

கொரோனா பேரிடர் காலத்தில் உயிர் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு வணிகமும் முக்கியம். இது பற்றி தமிழக முதல்வரிடம் விவாதித்து பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளோம். வியாபாரிகள் தனிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. இங்கு இருப்பவர்களே. வணிகம் சோர்ந்து போனால் நாடும் சோர்ந்து போகும். 

இந்நிலையில் வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அது தேவையில்லாத வார்த்தையாகும். ஏனென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. வணிகர்களை மென்மைபோக்கோடு அதிகாரிகள் கையாண்டால் வணிகர்கள் தெளிவாகி விடுவார்கள். 

இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய நிலையில் வணிகர்கள் இல்லை. மக்களோடு மக்களாக பழக கூடியவர்கள் நாங்கள். எங்களை ஒரு பெரிய சட்டம்-ஒழுங்கு ஏற்படுத்தக் கூடிய வகையில் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது போன்ற அறிக்கையை வெளியிடுபவர்கள் சற்று அடக்கத்தோடு¸ வணிகர்களை புரிந்து கொண்டு அறிக்கையை வெளியிட வேண்டும். 

பெட்ரோல்¸ டீசல் விலை உயர்வால் கடுகு முதல் அனைத்து மளிகை பொருட்களும் விலை உயரும் அபாயம் இருப்பதால் பெட்ரோல்¸ டீசல் விலைய குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு போராட்டத்தில் இறங்கும். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஓ.பி.எஸ்.அறிக்கை - பொங்கிய விக்கிரமராஜா

பிறகு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி ஒன்றையும் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் வழங்கினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது¸ 

தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு தளர்வினை அளித்து¸ அனைத்து வணிகமும் திறந்து செயல்பட அனுமதித்து இருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக முதல்வர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதோடு¸ வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப¸ கொரோனா பெருந்தொற்று நெறிமுறைகளை வணிகர்கள் கையாள்வதற்கான விழிப்புணர்வையும்¸ நடவடிக்கைகளையும் பேரமைப்பு முடுக்கிவிட்டுள்ளது. 

ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் பெருந்தொற்றின் 3வது அலைக்கு வணிகமும்¸ வணிகச் சமுதாயமும் எள்ளளவும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதோடு¸ பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய்த்தொற்றை அடியோடு வேரறுத்திட அனைத்து வணிகர்களும் அரசோடு துணை நிற்குமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிகர்கள் நலன் சார்ந்து இருகரம் கூப்பி வேண்டுகின்றது.

அதே சமயத்தில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அறிக்கைகள் அளிக்கின்ற வகையில்¸ பேரமைப்பின் இணைப்பில் இருக்கின்ற வணிகர்கள் நிச்சயம் நடந்துகொள்ள மாட்டார்கள் என்பதோடு¸ பொருளாதாரத்தையும்¸ வாழ்வாதாரத்தையும் ஒருமிக்க இழந்து அரசின் தளர்வுகளின் அடிப்படையில் வணிகம் உயிர்த்தெழுந்திட முனைந்திருக்கின்ற வணிகர்கள் மீது தவறான கருத்துக்களை பதிவிட்டு¸ தொழிலை முடக்கிவிடக்கூடாது என்பதில் நமது வணிகர்கள் கவனம் செலுத்திட வேண்டுமென பேரமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

அறிக்கைகள் வணிகர்களை மிரட்டும் வகையில் இருக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அன்புடன் கோருவதோடு¸ வணிகர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கமே என்னும் நிலைபாட்டை உறுதி செய்யும் வகையில்¸ அறிக்கை அளிப்பவர்கள் தங்களின் நடவடிக்கைகளை மாற்றியமைத்து கொள்ள வேண்டுமென வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓ.பி.எஸ்.அறிக்கை - பொங்கிய விக்கிரமராஜா

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சென்னையில் வணிக வளாகங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அபராதம் வசூலிப்பது கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாது. எனவே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்¸ போலீசாரை விட்டு கண்காணிக்க வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையே விக்கிரமராஜாவின் கொந்தளிப்புக்கு காரணம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. .

ஆனால் அவரது பேட்டியிலும்¸ சங்கத்தின் அறிக்கையிலும் ஓ.பி.எஸ் பெயர் குறிப்பிடப்படவில்லை. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!