வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கும் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் ரெட்டி¸ திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு¸ கடந்த 17.06.2021 அன்று பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே காவல்துறையை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டும் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக குறுஞ்செய்திகள் மூலமும் புகார் அளிக்கும் வகையில் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 என்ற சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை எண் திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்¸ கடந்த 17.06.2021 அன்று முதல் பொதுமக்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் வாயிலாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குரல் அழைப்பு மற்றும் வாடஸ்அப் குறுஞ்செய்தி வாயிலாக¸ மொத்தம் 291 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 253 புகார்கள் மீது உடனடியாக விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
மேலும்¸ கடந்த 23.06.2021 அன்று வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வழியாக பெறப்பட்ட புகாரினை அடுத்து¸ திருவண்ணாமலை நகர உட்கோட்டம்¸ மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட¸ மாயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணம் காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும்¸ சட்ட விரோதமாக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக 13 புகார்கள் பெறப்பட்டு அதன்பேரில் 14 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹலோ திருவண்ணாமலை போலீஸ் திட்டத்தின் சிறப்புகள்
👉 இருந்த இடத்திலிருந்தே தொலைபேசி வாயிலாகவும் வாட்ஸ்அப் மூலமும் புகார்களை தெரிவிக்கலாம்.
👉 எந்த வகையான சட்ட விரோத செயல்களைப் பற்றி தெரிவிக்க 9988576666 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
👉 புகார் மனுக்களை வாட்ஸ்அப் வாயிலாக 9988576666 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்
👉 அனுப்படும் புகார்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும்.
👉 பெறப்படும் புகார்கள் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
👉 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வையில் மாவட்டம் முழுவதும் 3 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெறப்படும் புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள்ளாக தீர்வு காணப்படும்.
👉 புகார்தாரர்களின் தொலைபேசி எண் மற்றும் அவர்களின் அடையாளம் ரகசியம் காக்கப்படும்.