செஞ்சி அருகே உள்ள கொழப்பலூர் மாரியம்மன் கோயிலில் கண் நோய் குணமாக பக்தர்கள் அபிஷேக எண்ணெய்யை கண்களில் விட்டு செல்கின்றனர்.
மேலும் குழந்தை வரம் வேண்டி கூழாங்கற்களை அடிமடியில் கட்டி பெண்கள் கோயிலை வலம் வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள கொழப்பலூர் கிராமத்தில் பக்தர்களின் கண்களை காக்கும் பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. அம்பாள் பார்வதிதேவி இத்தலத்தில் மாரியம்மனாக அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் தீராத கண் சம்பந்தமான நோய்கள் அபிஷேக எண்ணெய்யை கண்களில் விட்டால் விரைவில் கண் நோய் குணமாகும் என்பது ஐதீகமாக உள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்மனுக்கு வெள்ளி தங்கம் போன்றவற்றில் செய்த கண் மலர் கோவிலுக்கு வழங்கி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
இயற்கையைத் தாயாக வழிபடும் மரபு வழியில் தென்நாட்டின் பெருந்தெய்வமாகவும்¸ குறிப்பாக தமிழகத்தின் தலை சிறந்த அன்னையாக விளங்கக்கூடிய அம்மன் வடிவம் மாரியம்மன் ஆகும்.
இத்தலத்தில் அம்மனுக்கு முகத்தில் மஞ்சள் காப்பு சாத்தப்படுகிறது. அம்மனுக்கு சாத்திய மஞ்சள் முடக்கு அம்மை¸ புட்டாள அம்மை¸ வாதம்¸ கை¸ கால்¸ வீக்கம் போன்ற என்னற்ற நோய்களுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது. கண் பார்வை குறைபாடு¸ கண் பூவிழுதல்¸ கண் சிவந்து நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு சுயம்பு அம்மன் மீது அபிஷேகம் செய்த எண்ணெய்யை பிரசாதமாக வழங்கப்படுகிறது. செவ்வாய்¸ வெள்ளி கிழமைகளில் மட்டும் அந்த எண்ணெய் கண்ணில் இட்டு வர கண் பிரச்சினை குணமடைகிறது. கண் பார்வை சரியானதும் அம்மனுக்கு வெள்ளி தங்கம் போன்றவற்றில் செய்த கண்மலர்¸ வழங்கி பக்தர்கள் தன் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த சுயம்பு அம்மன் பிள்ளைப்பேறும் வழங்குகிறாள். மஞ்சள் வண்ண துணியில் கூழாங்கற்களை அடிமடியில் வைத்துகட்டி கோயிலை வலம் வந்து அம்மன் சன்னதி முன் கட்டி தொட்டில் ஆட்டி விடுவர். பிறகு பிள்ளைப்பேறு கிடைத்ததும் அம்மனுக்கு எடைக்கு எடை நாணயங்கள்¸ வெல்லம்¸ பழம் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்ப காணிக்கையை செலுத்தி வருகின்றனர்.
குறிப்பு : இத்தகைய பழமையும் பெருமையும் வாய்ந்த கீற்றுகொட்டகையில் இருந்த பிராமி எழுத்தால் பொறிக்கப்பட்ட கல் பலகையை சுயம்புவாக வணங்கிய கிராம மக்கள் கடந்த 27.01.2021 அன்று ஊர் மக்கள் ஒன்றுகூடி கும்பாபிஷேகத்தை வெகுசிறப்பாக நடத்தினர்.
திருவிழா :-
ஆடி¸ ஆவணி¸ தை மாதங்களில் திருவிழா காலங்களில் ஆந்திரா¸ கர்நாடகா¸ மற்றும் தமிழகமெங்கும் இருந்தும்¸ சுற்றுவட்டார கிராமங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுயம்பு அம்மனைக் காண வருகின்றனர். திருவிழா காலங்களில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல்¸ மாவிளக்கு ஏற்றுதல்¸ அங்கபிரதட்சனம் செய்தல்¸ தீச்சட்டி எடுத்தல்¸ பால்குடம் எடுத்தல்¸ வேப்பிலை ஆடை கட்டுதல்¸ ஆடு மாடுகளை நேர்த்தி விடுதல்¸ நெல்¸ கம்பு போன்ற தாணிய வகைகள் வழங்குதல் போன்றவற்றை சுயம்பு அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் செய்து வருகின்றனர். கிராம மக்களும் இந்த சுயம்பு அம்மனை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பம்¸ கால்நடைகள் நோய் நொடிகள் இல்லாமல் வளர இந்த சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
அமைவிடம் :-
திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி செல்லும் அனைத்து பேருந்துகளும் கடலாடி குளம் நின்று செல்லும். கடலாடி குளத்திலிருந்து 3வது கி.மீ. தூரத்தில் கொழப்பலூர் மாரியமமன் கோவிலுக்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
– ப.பரசுராமன்.